/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
20 ரூபாய் முத்திரைத்தாள் கிடைக்காமல் மக்கள் அவதி
/
20 ரூபாய் முத்திரைத்தாள் கிடைக்காமல் மக்கள் அவதி
ADDED : மார் 13, 2024 10:14 PM
அன்னூர் : 20 ரூபாய் முத்திரைத்தாள் கிடைக்காததால், அன்னூர் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பேரூராட்சியில், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிட அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், இன்சூரன்ஸ் தேவைகளுக்கும் 20 ரூபாய் முத்திரைத்தாள் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக அன்னூர் தாலுகாவில் எந்த முத்திரைத்தாள் விற்பனையாளரிடமும் 20 ரூபாய் முத்திரைத்தாள் ஸ்டாக் இல்லை. இதனால் 50 ரூபாய் முத்திரைத்தாளை மக்கள் வாங்க வேண்டி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' அன்னூர், மேட்டுப்பாளையம் என கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், 20 ரூபாய் முத்திரைத்தாள் ஸ்டாக் இல்லாததால், 50 ரூபாய் முத்திரைத்தாள் வாங்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே முத்திரைத்தாள் விலையிலிருந்து, 10 சதவீதம் கூடுதல் தொகை செலுத்தி வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் 20 ரூபாய் முத்திரைத்தாள் இல்லாததால் மிக அதிக தொகைக்கு முத்திரைத்தாள் வாங்க வேண்டி உள்ளது. அரசு விரைவில் வழங்க வேண்டும்,' என்றனர்.
முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கூறுகையில், 'அன்னூர் கருவூலம் உள்பட கோவை மாவட்டத்தில் எந்த கருவூலத்திலும் 20 ரூபாய் முத்திரைத்தாள் ஸ்டாக் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் 50 ரூபாய் முத்திரைத்தாளை வாங்கி கேட்போருக்கு தருகிறோம். அரசு சப்ளை செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது,' என்றனர்.

