/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
150 செடிகளுடன் தயாராகும் ஆர்கிட் பூங்கா அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்
/
150 செடிகளுடன் தயாராகும் ஆர்கிட் பூங்கா அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்
150 செடிகளுடன் தயாராகும் ஆர்கிட் பூங்கா அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்
150 செடிகளுடன் தயாராகும் ஆர்கிட் பூங்கா அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்
ADDED : டிச 20, 2025 08:52 AM

கூடலுார்: கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், 150 ஆர்கிட் செடிகளுடன் தயாராகும் ஆர்கிட் பூங்கா அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.
கூடலுார் வனப்பகுதி பல அரிய வகை தாவரங்களின் வாழ்விடமாக உள்ளது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட 'ஆர்கிட்' மலர் செடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் வடிவத்திலும் வண்ணத்திலும் வேறுபட்டவை. ஈரபதமான மரங்கள், பாறைகள், மண்ணில் வளரக்கூடிய இச்செடிகளில் இருந்து, பூக்கும் பூக்கள் ஒரு வாரம் முதல் மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும்.
தற்போது, கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் பசுமை குடில் அமைத்து, 70க்கும் மேற்பட்ட ஆர்கிட் செடிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி கூடலுார் ஜீன்புல் தாவர மையம், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆர்க்கிடோரியம் எனப்படும் ஆர்கிட் பூங்காக்களை மேம்படுத்த, தலா, 1.5 கோடி வீதம் மாநில அரசு, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு நவ., மாதம் தலா, 75 லட்சம் ரூபாய் நிதியை விடுவித்தது. தொடர்ந்து, நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் ஏற்கனவே இருந்த கட்டடம், பசுமை குடில்களில் பராமரிப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இங்கு, உள்ளூரில் சேகரிக்கப்பட்ட மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, 150க்கும் மேற்பட்ட ஆர்கிட் செடிகள் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில்,'ஜீன்புல் தாவர மையத்தில், ஆர்கிட் பூங்கா அமைக்க அரசு, முதல் கட்டமாக, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதன் மூலம், ஆர்கிட் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள ஆர்கிட் செடிகள் குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பயன் பெறும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும்,' என்றனர்.

