/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஸ்கோர்ஸ் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் 'சீல்' வைக்க ஊட்டி கமிஷனர் உத்தரவு
/
ரேஸ்கோர்ஸ் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் 'சீல்' வைக்க ஊட்டி கமிஷனர் உத்தரவு
ரேஸ்கோர்ஸ் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் 'சீல்' வைக்க ஊட்டி கமிஷனர் உத்தரவு
ரேஸ்கோர்ஸ் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் 'சீல்' வைக்க ஊட்டி கமிஷனர் உத்தரவு
ADDED : பிப் 07, 2024 12:57 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம், வருவாய் துறைக்கு சொந்தமானது. 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகத்துக்கு, 1946 முதல், 99 ஆண்டுகளுக்கு 160 ஏக்கர் நிலம், குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த வாடகை தொகையை காலத்துக்கு தகுந்தார் போல மறுசீரமைக்க, 8 ஆண்டுகளுக்கு முன், மாநில அரசு முன் வந்தபோது, அதை ஏற்க மறுத்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது; வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 14ல் நடக்க உள்ளது. பந்தயத்தில் பங்கேற்க, சென்னை, பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 500க்கு மேற்பட்ட குதிரைகளை அதன் உரிமையாளர்கள் வாகனத்தில் கொண்டு வர உள்ளனர்.
தொடர்ந்து, குதிரைகளை அடைக்க, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் உள்ள சதுப்புநில பகுதியில், நிரந்தர கொட்டகைக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
ரேஸ் கோர்ஸ் இடம் குத்தகை அடிப்படையில் இருப்பதாலும், பல கோடி ரூபாய் வாடகை பாக்கி நிலுவையில் உள்ள நிலையில், அங்கு விதிகளை மீறி, கட்டுமான பணி நடந்து வருவது, அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஊட்டி தாசில்தார் சரவணன் கூறுகையில், ''மெட்ராஸ் ரேஸ் கிளப் வருவாய் துறைக்கு பல கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்துள்ளது. இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டுமான பணிகளை மேற்கொள்வது விதிமீறிய செயல்.
''பல ஆண்டுகளாக, இங்கு தற்காலிக கொட்டகை மட்டுமே அமைக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து கலெக்டரின் ஆலோசனை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''ரேஸ் கிளப் நிர்வாகம், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ள, எவ்வித அனுமதியும் பெறவில்லை. புகார் வந்ததால் ஆய்வு மேற்கொண்டு, 'சீல்' வைக்க உத்தரவிட்டுள்ளேன். இதற்கான 'நோட்டீஸ்' அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஊட்டி ரேஸ் கிளப் நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'எங்கள் நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் இருப்பதால், நாங்கள் எதுவும் கூற முடியாது' என்றனர்.

