/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகேடுகள் : அதிகாரிகள் விசாரணை
/
ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகேடுகள் : அதிகாரிகள் விசாரணை
ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகேடுகள் : அதிகாரிகள் விசாரணை
ஆதரவற்றோர் காப்பகத்தில் முறைகேடுகள் : அதிகாரிகள் விசாரணை
ADDED : செப் 24, 2024 08:30 PM

ஊட்டி:ஊட்டி அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில், நகர்புற வீடட்றோர் தங்கும் விடுதி கட்டடத்தில், ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின், ஊட்டி தொகுதி இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து புகார் மனு அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''முள்ளிக்கொரையில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், கலெக்டரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.
இந்நிலையில், கலெக்டர் உத்தரவின்பேரில், ஆர்.டி.ஓ., மகாராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனிதாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய குழுவினர், அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று, மூன்று மணிநேரம் ஆய்வு செய்தனர். அப்போது குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தனர். அவர் கொடுத்த ஆவணங்களையும் சோதனை செய்தனர்.
ஆர்.டி.ஓ., மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, '' கலெக்டர் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு காப்பகத்தில் விசாரணை நடத்தினோம். அந்த இல்லத்தில் தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து அறிக்கை இரண்டு நாட்களுக்குள் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.
காப்பக நிர்வாகி தஸ்தகீர் கூறுகையில்,''காப்பகத்தின் மீது புகார் அளித்துள்ள செல்வகுமார் மற்றும் செந்தில், மகேஷ் உட்பட சிலர் குழுவாக சேர்ந்து, காப்பத்தை காலி செய்ய முயன்று வருகின்றனர். அதில், சிலர் பணம் கேட்டு மிரட்டினர். அதனை நான் தராததால் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்ட ரீதியாக சந்திக்க உள்ளேன்,'' என்றார்.

