/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பனியின் தாக்கம் அதிகரிப்பு;: 'ஐஸ்பெர்க்' அறுவடை தீவிரம்
/
பனியின் தாக்கம் அதிகரிப்பு;: 'ஐஸ்பெர்க்' அறுவடை தீவிரம்
பனியின் தாக்கம் அதிகரிப்பு;: 'ஐஸ்பெர்க்' அறுவடை தீவிரம்
பனியின் தாக்கம் அதிகரிப்பு;: 'ஐஸ்பெர்க்' அறுவடை தீவிரம்
ADDED : டிச 22, 2025 05:37 AM

கோத்தகிரி: கோத்தகிரியில் பனி பொழிவின் தாக்கம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் அவசரகதியில் 'ஐஸ் பெர்க்' அறுவடை செய்து வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், மலை காய்கறி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. சமீப காலமாக, இங்கிலீஷ் காய்கறிகளான, ஐஸ்பெர்க், சல்லாரை, சுகுனி, புருக்கோலி மற்றும் லீக்ஸ் போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இவ்வகை பயிர்களை, வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று, விலைக்கு வாங்குவதால், விவசாயிகளுக்கு கூடுமானவரை செலவினம் குறைவதுடன், கணிசமான லாபம் கிடைக்கிறது.
கோத்தகிரி பகுதியில், கூக்கல்தொரை, ஈளாடா மற்றும் கதகுத்தொரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் இங்கிலீஷ் காய்கறி பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், குறிப்பாக கோத்தகிரி தாழ்வான பகுதிகளில், கடந்த, ஒரு வாரத்திற்கு மேலாக, கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக,நேற்று முன்தினம் பனியின் தாக்கம் அதிகரித்தது.
இதனால், பயிர்கள் கருகி வருகின்றன. இனிவரும் நாட்களில், பனியின் தாக்கம் தொடர வாய்ப்புள்ளதால், தயாரான 'ஐஸ்பெர்க்' அவசர கதியில் அறுவடை செய்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயி நெப்போலியன் கூறுகையில், ''பயிரிட்ட, 70 நாட்களில் ஐஸ்பெர்க் அறுவடைக்கு தயாராகிறது. விவசாயிகளுக்கு, சில தனியார் நிறுவனங்கள், விதை, நாற்றுகளுடன் இடுபொருள் அனைத்தையும் வழங்கி, விவசாயம் செய்ய வைக்கின்றனர்.
விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில், விலை உயர்ந்தாலும், குறைந்தாலும், நிர்ணயத்த விலையை நிறுவனங்கள் வழங்குகின்றன. சில விவசாயிகள் சொந்தமாகவே விவசாயம் செய்கின்றனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்த ஐஸ்பெர்க், தற்போது, 30 முதல், 45 ரூபாய் வரை குறைந்துள்ளது. தற்போது, பனி தாக்கி வருவதால், அவசரமாக அறுவடை செய்து வருகிறோம்,''என்றார்.

