/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகராட்சியாக தரம் உயர்ந்தும் சாலை பணியில் சுணக்கம்
/
நகராட்சியாக தரம் உயர்ந்தும் சாலை பணியில் சுணக்கம்
ADDED : ஏப் 17, 2025 09:07 PM

கோத்தகிரி; கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்ந்தும், சாலை பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பேரூராட்சியில், மக்கள் தொகை மற்றும் வருவாய் காரணமாக, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள, 21 வார்டுகளில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, நகர பகுதியில், அடிப்படை வசதிகளின் தேவை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மாநில அரசு, பொதுமக்களின் எதிர்ப்புகளை அடுத்து, கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. ஒருபுறம், இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில், வரவேற்பை பெற்றாலும், மறுபுறம், வரி உயர்வு உள்ளிட்டவை அதிகரிக்கும் என்பதால், பெரும்பாலான மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 'ஜல் ஜீவன்' திட்டத்தில், நகரப் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க எதுவாக , ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளது.
இப்பணிக்காக, சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. இதனால், வாகனங்கள் சென்றுவரும் போது, இடையூறு ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி நேரு பூங்காவில், அடுத்த மாதம் காய்கறி கண்காட்சி நடக்க உள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

