/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பில்லுார் அணையில் அதிக வண்டல்... மண் தேக்கம்!பவானியில் தடுப்பணை கட்ட எதிர்பார்ப்பு
/
பில்லுார் அணையில் அதிக வண்டல்... மண் தேக்கம்!பவானியில் தடுப்பணை கட்ட எதிர்பார்ப்பு
பில்லுார் அணையில் அதிக வண்டல்... மண் தேக்கம்!பவானியில் தடுப்பணை கட்ட எதிர்பார்ப்பு
பில்லுார் அணையில் அதிக வண்டல்... மண் தேக்கம்!பவானியில் தடுப்பணை கட்ட எதிர்பார்ப்பு
ADDED : மே 31, 2024 10:50 PM

மேட்டுப்பாளையம்:பில்லுார் அணையில் வண்டல் மண் அதிகம் படிவதை தடுக்க, அத்திக்கடவு பவானி ஆற்றில், இரண்டு இடங்களுக்கு மேல் தடுப்பணைகள் கட்ட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக இருப்பது பில்லுார் அணை. கோவை மாநகராட்சியின் அத்திக்கடவு - முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கான தண்ணீர், பில்லுார் அணையிலிருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது. அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீர், பவானி ஆறு வழியாக, பவானி சாகர் அணைக்கு செல்கிறது.
கோவை மாநகராட்சியின், மூன்றாவது குடிநீர் திட்டம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி உள்பட இரண்டு மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு, தேவையான குடிநீர் வழங்க, பவானி ஆற்றில் இருந்து, 21 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சேறு, சகதி
நீலகிரி மாவட்டம், கேரள வடக்கு பகுதிகள், பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இங்கு பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்தில் மரங்கள், மட்டைகள், குப்பைகள், மண் ஆகியவை, அத்திக்கடவு பவானி ஆறு வழியாக பில்லுார் அணைக்கு அடித்து வரப்படுகிறது.
பில்லுார் அணை, 1967ல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை, அணையில் துார் எடுக்காததால், சேறும், சகதியும் வண்டல் மண்ணும், 45 அடிக்கு மேல் தேங்கியுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைய வாய்ப்பு
விவசாயிகள் கூறியதாவது:
பில்லுார் அணையின் நீர்மட்டம் குறைந்த போது, அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை பாதி அளவாவது எடுத்திருந்தால், தற்போது பெய்ய உள்ள தென்மேற்கு பருவ மழையால், அணையில் தேங்கும் தண்ணீரின் அளவு ஓரளவு அதிகரித்து இருக்கும். ஆனால், வண்டல் மண் எடுக்காததால், தண்ணீர் கூடுதலாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் குறுக்கே, திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்காக, தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், திருப்பூர் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் ஆற்றில் இருந்து எடுக்க முடிகிறது.
அதேபோன்று தமிழக எல்லையான கூடப்பட்டியில் இருந்து, பில்லுார் அணை வரை, அத்திக்கடவு பவானி ஆற்றில், இரண்டு இடங்களில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால், மழைக்காலத்தில் வெள்ளத்தில் அடித்து வரும் சேறு, சகதி, குப்பை ஆகியவற்றை ஓரளவு தடுக்க முடியும்.
மழை காலம் முடிந்த பின் தடுப்பணையில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு, தடுப்பணையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றினால், பில்லூர் அணைக்கு வரும் வண்டல் மண் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

