/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
/
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
ADDED : டிச 20, 2025 09:12 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவகிரி பகுதியில், ஆளில்லாத வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பன் யானையால் அச்சம் ஏற்பட்டது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை தனியாக உலா வருகிறது. இந்த யானை பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் சாதாரணமாக வந்து செல்கிறது.
கடந்த ஒரு வாரமாக, சேரம்பாடி மற்றும் அய்யன்கொல்லி பகுதிகளில் முகாமிட்டது. வனத்துறையினர் சேரம்பாடி கோட்டைமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பந்தலுார் கூடலுார் சாலையில், தேவகிரி என்ற இடத்தில் சந்திரன் என்பவரது, வீட்டு கதவை திறந்து தும்பிக்கையை உள்ளே விட்டு நோட்டமிட்டது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்த யானை சத்துணவு கூட கதவுகளை உடைத்து அரிசியை ருசிக்கும் குணம் கொண்ட நிலையில், சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

