/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இஞ்சி விலை வீழ்ச்சி: நஷ்டத்தில் விவசாயிகள்
/
இஞ்சி விலை வீழ்ச்சி: நஷ்டத்தில் விவசாயிகள்
ADDED : டிச 29, 2024 11:16 PM

கூடலுார்; கூடலுாரில் விளையும் இஞ்சி விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் நீண்டகால பயன் தரும் தேயிலை, காபி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்களை தவிர, குறுகிய கால பயன் தரும் காய்கறிகள், நெல், வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, 60 கிலோ மூட்டை இஞ்சி, 8,000 ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தது. விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர். நடப்பு ஆண்டு அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், 60 கிலோ எடை கொண்ட விதை இஞ்சி, 10 ஆயிரம் ரூபாய்க்கு பெற்று, பயிரிட்டனர்.
நடப்பாண்டு துவக்கத்தில் எதிர்பார்த்த விலை கிடைத்தது. அக்., மாதம், முட்டைக்கு, 6,000 ரூபாய் வரை விலை கிடைத்தது. தொடர்ந்து, இஞ்சி விலை படிப்படியாக குறைய துவங்கியது.
தற்போது, 60 கிலோ மூட்டை இஞ்சி, 1500 ரூபாய் என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை வீழ்ச்சியால், கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு போல் நடப்பாண்டு, இஞ்சிக்கு நல்ல விலை கிடைக்கும் என, எதிர்பார்த்து, இஞ்சி விவசாயத்தில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது, 60 கிலோ எடை கொண்ட மூட்டை, 1,500 என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனால், முதலீடு கூட கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே, அரசு இஞ்சிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, கூறினர்.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு இஞ்சிக்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் நடப்பு ஆண்டும் அதிகம் விலை எதிர்பார்த்து, அதிக அளவில் இஞ்சி விவசாயத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தற்போது இஞ்சி வரத்து அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்தது,' என்றனர்.

