/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூல்; ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
/
அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூல்; ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூல்; ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூல்; ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
ADDED : டிச 16, 2024 09:18 PM

குன்னுார்; நீலகிரி அரசு பஸ்களில், எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல், பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதலில் நீலகிரியில் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இங்கு தனியார் பஸ்கள் இல்லாமல், அரசு பஸ்கள் மட்டும் இயங்குகின்றன.
கடந்த. 2018ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்திய போது, மலை பகுதிகளில், 20 சதவீதம் கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. 80 கி.மீ., துாரம் செல்லும் அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு சட்டவிரோத கட்டண வசூலை ரத்து செய்ய, கோடேரி கிராமத்தை சேர்ந்த மனோகரன், சென்னை ஐகோர்ட்டில், 2019ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
இதில், 'கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து துறைக்கு, கடந்த. 2024 பிப்., 23ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில், ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (எண்: 3943/2024) தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடுத்த மனோகரன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் பெயரில் இயங்கும், 180 அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலில், 'போக்குவரத்து கழகம் வழங்கிய கட்டண பட்டியல் போலியானது,' என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
வட்டார போக்குவரத்து அலுவலர் கையொப்பமிட்ட கட்டண பட்டியலை, பயணிகளுக்கு தெரியும் வகையில் வைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம். நீலகிரி அரசு பஸ்களில், எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாத டிரான்ஸ்போர்ட், பயணிகளை ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தி வருவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

