/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பாரஸ்ட்டேல்' வனத்தீயை கட்டுப்படுத்த முயற்சி
/
'பாரஸ்ட்டேல்' வனத்தீயை கட்டுப்படுத்த முயற்சி
ADDED : மார் 18, 2024 11:38 PM

குன்னுார்;குன்னுார் 'பாரஸ்ட் டேல்' பகுதியில் கடந்த, 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் வைத்த தீ அருகில் இருந்த வனத்திற்கு பரவியது.
தீ பரவுவதை தடுக்க முடியாததால், 16, 17 தேதிகளில், கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைத்த ஹெலிகாப்டரின் உள்ள 'பக்கெட்டில்', ரேலியா அணையில் இருந்து தண்ணீரை நிரப்பி வந்து கொட்டி அணைத்தனர். இதனால், ஓரளவு தீ கட்டுப்பாட்டிற்கு வந்தது.
மரங்களில் பரவிய தீ அணைக்கப்பட்ட நிலையில், வனப்பகுதியின் தளத்தில் தீ பரவி வருகிறது.
இப்பகுதியில், நேற்று காலை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி கோட்டங்களில் இருந்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், 100 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ பரவ காரணம் என்ன?
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெயில் காலங்களில் தேயிலை தோட்டத்தில் வைக்கப்படும் தீ அருகில் உள்ள வனப்பகுதிகளுக்கு பரவுகிறது.
வனம் அழிந்த பின்னர், சில மாதங்களுக்கு பின்னர், அந்த பகுதியை ஆக்கிரமித்து விவசாய பணி நடக்கிறது. இந்நிலையில், பாரஸ்ட்டேல் பகுதியில் ஏற்பட்ட தீயால், 55 ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ வைத்த தோட்ட உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்துள்ளனர். இங்கு கட்டுமான பணிகளை கொண்டு வர அரசியல் வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகளை தவிர்க்க, தீயை அணைத்த பிறகு வேலி அமைத்து சோலை மர நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்,' என்றனர்

