/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால்...விதைப்பு பணி தீவிரம்!அரசின் விவசாய திட்டங்களை பயன்படுத்த அழைப்பு
/
மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால்...விதைப்பு பணி தீவிரம்!அரசின் விவசாய திட்டங்களை பயன்படுத்த அழைப்பு
மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால்...விதைப்பு பணி தீவிரம்!அரசின் விவசாய திட்டங்களை பயன்படுத்த அழைப்பு
மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால்...விதைப்பு பணி தீவிரம்!அரசின் விவசாய திட்டங்களை பயன்படுத்த அழைப்பு
ADDED : மே 15, 2024 12:06 AM

ஊட்டி:நீலகிரியில் கோடை மழை பரவலாக பெய்து, விவசாய நிலங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததன் எதிரொலியாக நடப்பாண்டில், ஏப்., இறுதி வரை மழை பெய்யவில்லை. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து, விதைப்பு பணிக்காக நிலங்களை தயார்படுத்திய விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். மலை காய்கறி வரத்து அடியோடு குறைந்ததால், ஊட்டி மார்க்கெட்டிலிருந்து பிற இடங்களுக்கு மலை காய்கறிகள் குறைந்தளவில் அனுப்ப முடிந்தது.
பரவலாக பெய்த மழை
இந்நிலையில், நடப்பாண்டில் ஏப்., இறுதி வரை மழை பொழிவு இல்லை. மே, 4 ம் தேதி துவங்கிய கோடை மழை மாவட்ட முழுவதும் அவ்வப்போது பெய்தது. நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, 12.69 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதை தொடர்ந்து முதல் போக விவசாயத்திற்காக தங்கள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மலை மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விதைப்பு பணி 'விறு விறு'
தற்போது, பெய்த மழை, மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக அமைந்துள்ளதால், எம். பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், தேனாடுகம்பை, கடநாடு, எப்பநாடு, கொல்லிமலை ஓரநள்ளி மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள், உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் ராமன் கூறுகையில், ''தற்போது பெய்த கோடை மழை விவசாய நிலங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையை உருவாக்கி உள்ளது. விவசாயிகள் விதைப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்,'' என்றார்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், '' விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் பெற்று கொள்ளலாம். மானியத்தில் விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் அதனை பெற்று பயனடையலாம்,'' என்றார்.

