ADDED : பிப் 14, 2024 11:56 PM

மேட்டுப்பாளையம் -சிறுமுகை அருகே நீலிபாளையம் சாலையில், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், ரவுண்டானா மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் துவங்கின.
சிறுமுகை அருகே, சிறுமுகை சாலை, காரமடை சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பெள்ளேபாளையம் ஊராட்சி சாலை, நீலிபாளையம் பிரிவு சாலை ஆகிய ஐந்து சாலைகள் ஒன்று சேரும் இடத்தில், பெரிய அளவில் ரவுண்டானா உள்ளது.
இந்த சாலைகள் வழியாக, தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஐந்து சாலைகள் ஒன்று சேரும் இடத்தில், நெடுஞ்சாலை துறையினர், அகலமான தார் சாலை அமைத்துள்ளனர்.
ஆனால் எவ்வித தடுப்பும் வைக்காமல் இருந்ததால், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்கள், இந்த இடத்தில் மோதி தினமும் விபத்துக்கு உள்ளாகின்றன.
நீலிபாளையம் சாலையில், நெடுஞ்சாலை துறையும், சிறுமுகை போலீசார் இணைந்து மாதிரி ரவுண்டானாவை அமைத்துள்ளனர். இந்த ரவுண்டானாவில் வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்வதால், கடந்த இரண்டு மாதமாக விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. அதனால், தற்போதுள்ள மாதிரி ரவுண்டானாவை அகற்றிவிட்டு, சிமென்ட் கான்கிரீட்டில் தடுப்பு அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் குமார் கூறுகையில்,
5 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக ரவுண்டானா கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 20 மீட்டர் சுற்றளவில், ஒன்றரை அடி உயரத்திற்கு கான்கிரீட்டில் தடுப்பு சுவர் அமைக்கப்படும். ரவுண்டானா அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன, என்றார்.

