ADDED : மார் 15, 2024 11:04 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே மாநில எல்லையில் உள்ள, கேரள மாநிலம் வயநாடு மீனங்காடி பகுதியில், மயிலாடி, அப்பாடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக புலி ஒன்று முகாமிட்டு, கால்நடைகளை தாக்கி வந்தது. சில நாட்களுக்கு முன்பு, மீனங்காடியில் குரியன் என்பவரின் ஆட்டு கொட்டகையில் புகுந்து, ஆடுகளை வேட்டையாடி சென்றது.
தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூண்டு வைத்தனர். அதனுள் ஆடு கட்டி வைக்கப்பட்டது. ஆட்டை வேட்டையாட கூண்டிற்குள் புகுந்த புலி கூண்டில் சிக்கியது. சிக்கியது 10 வயதுடைய ஆண் புலி என்பதும் தெரியவந்தது.
வனத்துறையினர் கூறுகையில், 'பிடிபட்ட புலி சுல்தான் பத்தேரி, குப்பாடி பகுதியில் வனவிலங்குகள் மீட்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

