ADDED : பிப் 06, 2024 10:06 PM
ஊட்டி:ஊட்டியில் பாரத் 'காஸ் ஏஜென்சி' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த, 2022 ம் ஆண்டு ஆக., 28 ம் தேதி நிறுவனத்தில் வேலை நேரம் முடிந்ததும் வழக்கம்போல் பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
மறுநாள் காலையில் ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மேற்பார்வையாளர் ரவீந்திரன் உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது, மேஜையில் இருந்த, 2.75 லட்சம் ரூபாய் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவீந்திரன் ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் ஒரு தனியார் விடுதியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜா, 26. கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு வருமானம் போதவில்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், ஊட்டியில் உள்ள பாரத் காஸ் நிறுவன கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பணத்தை திருடியதும் இவர்தான் என்பது தெரியவந்தது.
இவர் மீது நெல்லை, ஊட்டி அருகே கேத்தி போலீஸ் ஸ்டேசன் உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் விசாரணை தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மகாராஜாவுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தமிழினியன் உத்தரவிட்டார்.

