/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அவசர கதியில் வெள்ளை அடிப்பு; அவதிப்படும் மாணவர்கள்
/
அவசர கதியில் வெள்ளை அடிப்பு; அவதிப்படும் மாணவர்கள்
அவசர கதியில் வெள்ளை அடிப்பு; அவதிப்படும் மாணவர்கள்
அவசர கதியில் வெள்ளை அடிப்பு; அவதிப்படும் மாணவர்கள்
ADDED : மார் 28, 2024 05:44 AM

மேட்டுப்பாளையம், : மருதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அவசரக்கதியில் வெள்ளையடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1982ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தின் கீழ், இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த வகுப்பறையில் மராமத்து பணிகள் செய்து, வெள்ளை அடிக்க, காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்தது. டெண்டர் எடுத்தவரிடம், ஒரு மாதத்தில் மராமத்து பணிகள் செய்து, வெள்ளை அடித்து முடிக்க வேண்டும் என, நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
டெண்டர் எடுத்தவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மராமத்து பணிகள் செய்ய துவக்கி உள்ளார். அதனால் அங்கு செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி, மருதூர் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள, சேவை மைய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால், வராண்டாவில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெட்ஷீட்டில் மறைப்பு கட்டி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
ஒரு மாதத்தில் மராமத்து பணிகள் செய்து, வெள்ளை அடிப்பதாக திட்டமிடப்பட்ட பணிகள், ஐந்து மாதங்கள் ஆகியும் பணிகள் செய்யாமல், டெண்டர் எடுத்தவர் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், துவக்க பள்ளியில், ஓட்டுச் சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
அதனால், ஒப்பந்ததாரர், அவசரக் கதியில், பள்ளி கட்டடத்தின் வெளியே டிஸ்டம்பரிலும், வகுப்பறையின் உள்ளே சாதாரண சுண்ணாம்பிலும் வெள்ளை அடித்து வருகிறார். வகுப்பறையின் சீலிங்கில் உள்ள சுண்ணாம்பை, சுரண்டி எடுக்காமல், அதன் மீது புதிதாக சுண்ணாம்பு அடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,' காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், இந்த பள்ளி கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தால், எந்த நிலையில் வெள்ளை அடிக்கப்பட்டு உள்ளது என்ற, உண்மை நிலை தெரிய வரும். எனவே தரமான பெயிண்டால் பள்ளி வகுப்பறைக்கு வெள்ளை அடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிப்போம் என, பொதுமக்கள் கூறினர்.

