/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளாமரத்தூர் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறுப்பு
/
விளாமரத்தூர் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறுப்பு
ADDED : ஏப் 23, 2024 10:21 PM

மேட்டுப்பாளையம் : விளாமரத்தூரில், பவானி ஆற்றில் இருந்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கும், விளாமரத்தூர் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் குடும்பங்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், சுகாதாரமாக இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, விளாமரத்தூர் குடிநீர் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் இறுதில் ரூ.22.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் தொடங்கியது.
தற்போது இத்திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விளாமரத்தூரில் பவானி ஆற்றின் குறுக்கே, நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதன் அருகில் தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்படும் மற்றொரு கிணறுக்கான கட்டுமான பணிகளில், அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் கொண்டு செல்லும் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் தண்ணீரை கொண்டு செல்வதற்கான குழாய்கள், சாலையோரம் பதிப்பதற்காக, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இடுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு விளாமரத்தூரில் இருந்து தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீர்க்காக எடுக்கப்பட உள்ளது. இத்தண்ணீர் சாமன்னா நீரேற்று நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஆற்றின் குறுக்கே நீர் உறிஞ்சி கிணறு அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குழாய்களை சாலையோரம் பதிக்க மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் அப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்,' என்றார்.---

