/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
/
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஏப் 22, 2024 01:31 AM

கூடலுார்;கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் வாத்து, கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாநில அரசு கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
கால்நடை பராமரிப்பு துறையினர், தமிழக- -கேரளா எல்லை ஒட்டிய நாடுகாணி, தாளூர், சோலாடி, நம்பியார்குன்னு, கக்குண்டி, பூலகுன்னு, பாட்டவயல் மற்றும் தமிழக -கர்நாடக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடிகளில், நேற்று முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சோதனை சாவடிகளில் கிருமி நாசினி தெளித்த பின்னே அனுமதிக்கின்றனர்.
கோழி, முட்டை, கோழி தீவனம், கோழி கழிவுகள், அது தொடர்பான உபகரணங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிப்பதில்லை.
ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும், தலா ஒரு கால்நடை டாக்டர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், சுழற்சி முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடுகாணியில் நடந்து வரும் பணிகளை, கூடலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சக்திவேல் நாராயணன், கால்நடை நோய் தடுப்பு புலனாய்வுத்துறை டாக்டர் ராஜமுரளி, சேரம்பாடி அரசு கால்நடை டாக்டர் நவீன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூடலுார் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சக்திவேல் நாராயணன் கூறுகையில், ''தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை.
எனினும், கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு உள்ளோம். மறு உத்தரவு வரும் வரை இப்பணிகள் தொடரும்,'' என்றார்.

