/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலமலையில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
/
பாலமலையில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 20, 2024 01:42 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, கதிர்நாயக்கன்பாளையத்தில் சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் மத்திய பயிற்சி கல்லூரி செயல்படுகிறது. நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு பெற்றவர்கள் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்நாட்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பயிற்சி பெறும் சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை கோயில் வளாகத்தை சுற்றியுள்ள மலை கிராமங்கள் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி கடந்த ஆறு ஆண்டு காலமாக நடந்து வருகிறது.
தற்போது, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மலையேற்ற பயிற்சியை பெற பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை கோவில் வளாகம் அருகே தற்காலிக டென்ட் அமைத்து தங்கியுள்ளனர்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள காடுகளில் தங்கியிருந்து, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் உயிர் வாழ்வது எப்படி, காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், நக்ஸ்லைட்களை கண்காணிப்பது குறித்தும், காடுகளில் உள்ள மனித நடமாட்டம், விலங்கு நடமாட்டம் குறித்து அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு சி.ஆர்.பி.எப்., உதவி கமாண்டர் அனாஸ் தலைமையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

