/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் ;நிலத்தை கையகப்படுத்தியது வனத்துறை
/
யானைகள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் ;நிலத்தை கையகப்படுத்தியது வனத்துறை
யானைகள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் ;நிலத்தை கையகப்படுத்தியது வனத்துறை
யானைகள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் ;நிலத்தை கையகப்படுத்தியது வனத்துறை
ADDED : மே 17, 2024 12:16 AM
பாலக்காடு;பாலக்காடு அருகே, நான்கு ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தி யானைகளின் வழித்தடத்தை அமைக்கும் நடவடிக்கையை, கேரள வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கூர்த்தி தேசிய பூங்கா இடையில், யானைகளின் வழித்தடத்தை அமைக்க நான்கு ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்தி, வனமாக மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலக்காட்டில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கூர்த்தி தேசிய பூங்கா இடையே, 340 காட்டு யானைகளின் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டம், கருளாயி கிராமத்துக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த வனத்துறைக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, யானைகளின் நலனுக்காக செயல்படும் 'வாய்சஸ் பார் ஏசியன் எலிபன்ட்ஸ்' மற்றும் 'நேச்சர் மேட்ஸ் நேச்சர் கிளப்' ஆகியவை இணைந்து, இந்த நிலத்தை வாங்கி வனத்துறைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளன.
கரிம்புழை வனவிலங்கு சரணாலயத்துடன் இணைந்த சங்கரன்கோடின் ஒரு பகுதி இது. நியூ அமரம்பலம் காப்பக வனம், நிலம்பூர் யானைகள் காப்பகம் ஆகிய வன பகுதிகளால் சுற்றிலும் சூழப்பட்டு உள்ளது. யானைகளை தவிர புலி, சிறுத்தை, மான் ஆகிய விலங்குகளின் வாழ்விடமாகவும் இப்பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கரிம்புழை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள, நிலம்பூர் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட நெடுங்கயம் வனப்பகுதி அருகே, 4.03 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளோம். இந்த பகுதி வனத்துறையின் பாலக்காடு கிழக்கு வட்ட தலைமைப் பாதுகாவலரின் கீழ் வருகிறது.
முன்னதாக, இந்த நிலத்தின் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து, வனப்பகுதியாக பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் மதிப்பீடு செய்தார். இந்த நான்கு ஏக்கர் நிலத்தை வன நிலத்துடன் சேர்ப்பதற்கான விண்ணப்பம் மற்றும் நிலப்பதிவுகள் மாநில வனத்துறை தலைமை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரது பரிந்துரையை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

