/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த வலியுறுத்தல்
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த வலியுறுத்தல்
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த வலியுறுத்தல்
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த வலியுறுத்தல்
ADDED : மே 31, 2024 11:34 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில்,100 நாள் வேலை திட்டத்தில் தலைவர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்பதாக புகார் எழுந்து உள்ளது.
கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் காங்.,கட்சியை சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இவர், தேர்தல் விதிமுறை மீறி, 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய வேலைகள் ஒதுக்கீடு மற்றும் புதிய பணித்தள மேற்பார்வையாளர் நியமனம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்துள்ளது.
தோட்ட பராமரிப்புநிதி ஒதுக்கீடு
இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் சேரம்பாடி அருகே மன்னாத்திவயல் பகுதியில், தனியார் ஒருவரின் தோட்ட பராமரிப்புக்காக இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த பணியை மேற்கொள்வதற்காக ஏற்கனவே பணித்தள மேற்பார்வையாளராக உள்ள சுந்தர்லா என்பவர் நிலங்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்து, பணியாளர்களின் பெயர் விபரங்களை ஊராட்சியில் சமர்ப்பித்து வேலை துவங்க முயற்சி மேற்கொண்டுள்ளார் .
அப்போது பேசிய தலைவர், 'தன்னிடம் வந்து பணித்தள மேற்பார்வையாளர், இந்த வேலை தொடங்குவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை,' என, தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இதுவரை, 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியை மேற்கொள்ளாத கர்ணன் என்பவரை பணித்தள மேற்பார்வையாளராக நியமித்து பணியை துவங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதனால், இரண்டு பணித்தள மேற்பார்வையாளர்கள் சார்பில் பணியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் பணி மேற்கொள்ள முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இடத்தின் உரிமையாளர் பணியை மேற்கொள்ள தடை விதித்தார்.
தன்னிச்சையான முடிவு
அப்போது, அங்கு வந்த வார்டு உறுப்பினர் பிரமீதா கூறுகையில், ''100 நாள் வேலை திட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்ய வார்டு உறுப்பினர் மற்றும் பணித்தள மேற்பார்வையாளர் தேவைப்படும் நிலையில், நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். பணியாளர்கள் வருகை பதிவேட்டை தலைவர் வைத்துள்ளார். நான் இதுகுறித்து சென்று கேட்டால், 'இதில் வார்டு உறுப்பினர் தலையிடக்கூடாது,' என, தெரிவிப்பது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை,'' என்றார்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பன்னீர்செல்வம் கூறுகையில், ''இந்த பணியில், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. சேரங்கோடு ஊராட்சியில் தொடரும், 100 நாள் வேலைத்திட்ட முறைகேடு குறித்து உரிய தீர்வு ஏற்படுத்தாவிட்டால், விரைவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
சமூக ஆர்வலர் அம்சா கூறுகையில்,''இந்த குளறுபடி குறித்து தகவல் தெரிய, 'ஆர்டிஐ'யில் மனு போடப்பட்டுள்ளது. விசாரணை நடத்த மத்திய அரசுக்கு புகார் மனு அனுப்ப உள்ளேன்,'' என்றார்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் குமார் கூறுகையில்,''இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதுடன், தலைவருக்கு உரிய அறிவுரை வழங்கப்படும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

