/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காற்றில் விழுந்த நேந்திரன் வாழை மரங்களால் நஷ்டம்
/
காற்றில் விழுந்த நேந்திரன் வாழை மரங்களால் நஷ்டம்
ADDED : மே 15, 2024 12:07 AM

கூடலுார்;கூடலுார் பகுதி விவசாயிகள் வயல் நிலங்களில் நெல், காய்கறி தவிர்த்து நேந்திரன் வாழை, இஞ்சி பயிரிட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு கோடை மழை ஏமாற்றியதால், போதிய பாசன நீர் கிடைக்காமல் நேந்திரன் வழைகள் பாதிக்கப்பட்டது.
நான்கு மாத இடைவெளிக்கு பின் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மழையுடன் அவ்வப்போது வீசும் பலத்த காற்றில் பாடந்துறை, சிறு முள்ளி, ஸ்ரீ மதுரை, புளியம்பாறை பகுதிகளில், ஆயிரக்கணக்கான நேந்திரன வாழை மரங்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கோடை வறட்சியினால் தண்ணீர் இன்றி நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையுடன் வீசும் காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல், பல ஆயிரம் நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்துள்ளது. அறுவடைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், அவைகள் சாய்ந்துள்ளதால், கடும் நஷ்டம் ஏற்பட்டு, விவசாயத்திற்கு பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும்' என, கூறினர்.
இதனிடையே, காற்றில் சாய்ந்த வாழை மரங்கள் குறித்து, தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

