/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் பாதிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வு காண உடனடி நடவடிக்கை அவசியம்
/
விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் பாதிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வு காண உடனடி நடவடிக்கை அவசியம்
விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் பாதிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வு காண உடனடி நடவடிக்கை அவசியம்
விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்கள் பாதிப்பு கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வு காண உடனடி நடவடிக்கை அவசியம்
ADDED : ஏப் 12, 2024 01:08 AM

ஊட்டி:ஊட்டியில், அரசு விடுமுறை; வார இறுதி நாட்களில், சுற்றுலா வாகனங்கள்
அணிவகுத்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, உள்ளூர்
மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கி, அடுத்த மாதம், கோடை விழா நடக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
விடுமுறை நாளில் நெரிசல்
இந்நிலையில், நேற்று, அரசு விடுமுறை தினமான, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் ஊட்டி நகர பகுதியில் ஊர்ந்து சென்றன.
குறிப்பாக, ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பு, மதுவானா அருகே, தாவரவியல் பூங்கா சாலை மற்றும் ரோஜா பூங்கா சாலையில், அணிவகுத்த சுற்றுலா வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் திணறினர்.
கோத்தகிரி மற்றும் கிராமப்புறங்களில் இருந்து, ஊட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் போக்குவர நெரிசலில் சிக்கின. இதனால், தொட்டபெட்டா பகுதியில் இருந்து, ஊட்டி நகரை அடைய, 1:15 மணி நேரம் காலதாமதமானது.
தொழிலாளர்கள் பாதிப்பு
இதனால், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு அவசர தேவைக்காக செல்பவர்கள் மிகவும் தாமதமாக சென்று பாதிக்கப்பட்டனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,' பொதுவாக வார இறுதி நாட்களில் ஆண்டு முழுவதும், கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஊட்டி நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, கோடை சீசன் நிலவி வரும் நிலையில், நாள்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, வார இறுதி நாட்களில், 5 முதல் 10 ஆயிரம் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து வருகின்றன. அதில், தொட்டபெட்டா போன்ற சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில், கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்,' என்றனர்.

