/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் விடுதிகள் 'ஹவுஸ் புல்'; பஸ் ஸ்டாண்டில் துாங்கும் பயணியர்
/
ஊட்டியில் விடுதிகள் 'ஹவுஸ் புல்'; பஸ் ஸ்டாண்டில் துாங்கும் பயணியர்
ஊட்டியில் விடுதிகள் 'ஹவுஸ் புல்'; பஸ் ஸ்டாண்டில் துாங்கும் பயணியர்
ஊட்டியில் விடுதிகள் 'ஹவுஸ் புல்'; பஸ் ஸ்டாண்டில் துாங்கும் பயணியர்
ADDED : ஏப் 14, 2024 11:33 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளது. அடுத்த மாதம், மலர் கண்காட்சி உட்பட கோடை விழா நடக்கிறது.
சமவெளி பகுதியில் கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால், 'குளு குளு' ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதி மூன்று நாட்களில் மட்டும், 60,000 சுற்றுலா பயணியர் ஊட்டி வந்துள்ளனர்.
ஊட்டி நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில், ஏற்கனவே முன்பதிவு செய்து சுற்றுலா பயணியர் தங்கி வருகின்றனர்.
சீசன் காரணமாக விடுதி அறை கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம், ஊட்டி நகரம் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் தங்கும் விடுதிகளில் அறைகள் காலி இல்லை.
இரவில் தங்க வழி இல்லாமல், பல சுற்றுலா பயணியர் தங்கள் கார்களை பஸ் நிலையம் வெளிப்புறத்தில் நிறுத்திய பின், படுக்கை விரிப்பு, போர்வைகளை விலைக்கு வாங்கி, பஸ் நிலையத்திற்குள் குடும்பத்துடன் உறங்கினர்.
சுற்றுலா பயணியர் காலை கடன்களை கழித்து, குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதில், குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'ஊட்டி சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் தங்க ஏதுவாக, குறைந்த கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விட வேண்டும். பஸ் நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்களில், கழிப்பறை, குளியலறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.

