/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலக்காட்டில் இறுதி கட்ட பிரசாரம்
/
பாலக்காட்டில் இறுதி கட்ட பிரசாரம்
ADDED : ஏப் 24, 2024 10:07 PM

பாலக்காடு : கேரள மாநிலத்தில், லோக்சபா தேர்தலின் இறுதி கட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று மூன்று அணி சார்பிலும் 'ரோடு ஷோ' கோலாகலமாக நடந்தது.
கேரளாவில் லோக்சபா தேர்தல் நாளை 26ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் நேற்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பாலக்காட்டில் இறுதிக்கட்ட பிரசாரத்தில், மூன்று கட்சியினரும் 'ரோடு ஷோ' நடத்தினர்.
மதியம், 2:00 மணிக்கு பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக, மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமையில் 'ரோடு ஷோ' நடந்தது. அரசு மோயன் மாடல் பள்ளி, மேம்பாலம், சகுந்தலா சந்திப்பு, டவுன் பஸ் ஸ்டாண்ட், ராபின்சன் ரோடு, ஐந்து விளக்கு, குன்னத்துார் மேடு, கல்மண்டபம் வழியாக, 5:00 மணி அளவில் ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.
500க்கும் மேலான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர். செண்டை மேளம், தாரதப்பட்டை, நடன கலைஞர்கள் 'ரோடு ஷோ'வில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் 'ரோடு ஷோ' மாலை, 3:00 மணிக்கு, ஒலவக்கோடு சந்திப்பில் துவங்கியது. முன்னதாக வேட்பாளர் ஸ்ரீகண்டனனுக்கு தொண்டர்கள் மலர் துாவி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, ஜைனிமேடு, அரசு விக்டோரியா கல்லுாரி, சுண்ணாம்புத்தரை, சகுந்தலா சந்திப்பு, டவுன் பஸ் ஸ்டாண்ட், கோட்டை மைதானம், குன்னத்துார்மேடு வழியாக ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு, தாளத்திற்கேற்ப நடனமாடி இறுதி கட்டப் பிரசாரத்தில் பிரமாண்டம் காட்டினர்.
பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி முன், 5:00 மணிக்கு மா.கம்யூ., கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் 'ரோடு ஷோ' துவங்கியது. முன்னதாக வேட்பாளர் விஜயராகவனுக்கு கட்சி அலுவலகத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
'ரோடு ேஷா'வானது, தாரைக்காடு, தலைமை தபால் அலுவலகம், சுல்தான்பேட்டை சந்திப்பு வழியாக, 6:00 மணி அளவில் ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது.
மூன்று கட்சி சார்பிலும் நடந்த 'ரோடு ஷோ', ஒரே இடத்தில் சங்கமித்து கொடியசைத்து, கோஷங்கள் முழங்கியதால் அப்பகுதியே பரபரப்பாக மாறியது.

