/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பறவை காய்ச்சல்: பரிசோதனையில் தொய்வு
/
பறவை காய்ச்சல்: பரிசோதனையில் தொய்வு
ADDED : ஏப் 26, 2024 12:05 AM
பந்தலுார்;கேரளா மாநிலம் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான நோய் பாதித்த வாத்துக்கள் மற்றும் கோழிகள் புதைக்கப்படுகின்றன.
கேரள பறவை காய்ச்சல் நோயை தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், மாநில எல்லை சோதனை சாவடிகளில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, மாநில கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக எல்லையோர பகுதியான, பந்தலுார் அருகே உள்ள சோதனை சாவடிகளில், வாகன சோதனை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கூறுகையில், 'மாநில எல்லை சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை டாக்டர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்படும் நிலையில் அதில், சிலர், வாகனங்களை ஆய்வு செய்யாமல் பல வாகனங்களை விட்டு விடுகின்றனர்.
எல்லைகளில், பெயரளவு பணி மேற்கொள்ளாமல், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணியில், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட வேண்டும்,' என்றனர்.

