/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் மீண்டும் வளரும் அன்னிய செடிகள் வேரோடு அகற்றினால் மட்டுமே பயன்
/
முதுமலையில் மீண்டும் வளரும் அன்னிய செடிகள் வேரோடு அகற்றினால் மட்டுமே பயன்
முதுமலையில் மீண்டும் வளரும் அன்னிய செடிகள் வேரோடு அகற்றினால் மட்டுமே பயன்
முதுமலையில் மீண்டும் வளரும் அன்னிய செடிகள் வேரோடு அகற்றினால் மட்டுமே பயன்
ADDED : ஆக 12, 2024 02:21 AM

கூடலுார்;'முதுமலையில் அன்னிய செடிகளை வேரோடு அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், வனம் சூழ்ந்த பகுதி, 65 சதவீதமாக உள்ள நிலையில், வன பகுதியில் பயனில்லாத கற்பூரம், சீகை, சென்னா உள்ளிட்ட அன்னிய மரங்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பயனற்ற அன்னிய மரங்களை அகற்ற, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி, நீலகிரியில் உள்ள அன்னிய மரங்களான கற்பூரம், சிகை, சென்னா மரங்கள் வனத்துறை சார்பில் அகற்றப்பட்டு, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் அகற்றப்பட்ட அன்னிய மரங்கள்; செடிகளின் வேர் பகுதி அகற்றப்பட வில்லை. தற்போது, அதிலிருந்து புதிய செடிகள் துளிர் விட்டு, மீண்டும் வளர துவங்கி உள்ளது.
அப்பகுதியில், விலங்குகளின் உணவு தாவரங்களின் வளர்ச்சி மீண்டும் பாதிக்க துவங்கி உள்ளது. இதனால், வன விலங்குகளுக்கான உணவு பற்றாக்குறை அதிகரிக்க துவங்கி உள்ளது.
வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனத்தில் வளர்ந்த அன்னிய செடிகள்; மரங்களால் எந்த பயனும் இல்லை. இவைகள், வன விலங்குகள் விரும்பி உண்ணும் தாவரங்கள், புற்கள் வளர தடையாக உள்ளன.
கடந்த ஆண்டு வனத்தில் உள்ள அன்னிய மரங்கள்; செடிகளை வெட்டி அகற்றினர். ஆனால், அதன் வேர் பகுதியிலிருந்து மீண்டும் அன்னிய செடிகள் வளர துவங்கியுள்ளது. இவைகள், மற்ற தாவரங்கள் வளர இடையூறாக உள்ளதால், வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அன்னிய செடிகள்; மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்,' என்றனர்.

