/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டத்தில்... விதி மீறலால் சிக்கல்! உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகார் மனு
/
நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டத்தில்... விதி மீறலால் சிக்கல்! உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகார் மனு
நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டத்தில்... விதி மீறலால் சிக்கல்! உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகார் மனு
நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டத்தில்... விதி மீறலால் சிக்கல்! உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகார் மனு
ADDED : மே 17, 2024 11:41 PM

குன்னுார்;குன்னுார்-- ரன்னிமேடு இடையே நடந்த மலை ரயில் சோதனை ஓட்டத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினரை அழைத்து சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி-குன்னுார் -மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடை சீசனையொட்டி வாரத்துக்கு, 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. அதில், பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காரணமாக கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், 'அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு மலை ரயில் இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனால், தினமும் சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மலை ரயில் கட்டணத்தை உள்ளூர் பயணிகளுக்காக குறைக்கவும் மத்திய ரயில்வே நிர்வாகத்துக்கு கடந்த பல மாதங்களாக கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சோதனை ஓட்டத்தில் விதிமீறல்
இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார் -ரன்னிமேடு இடையே, குன்னுார் பணிமனை சீனியர் செக்சன் இன்ஜினியர் சுப்ரமணியம் தலைமையில் மூன்று பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
அதில், அவர் தனது குடும்பத்தினரை அழைத்து சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலரும் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர்.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,'' மலை ரயில் சோதனை ஓட்டத்தின் போது பயணிகள் அழைத்து செல்ல கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.
அதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரி, விதிகளை பின்பற்றாமல் ரயில்வே பாதுகாப்புக்கு முரணாக தனது குடும்பத்தினரை அழைத்து சென்றுள்ளார்.
இது சக ஊழியர்கள்; பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனை விசாரணை செய்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தென்னக ரயில்வே சேலம் கோட்ட பி.ஆர்.ஓ., மரியமைக்கேல் கூறுகையில்,''இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் ஏற்கனவே வந்த நிலையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

