/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
/
எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED : ஏப் 10, 2024 07:05 AM
மோகனுார் : எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், வாழவந்தி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள, 18 பட்டி கிராமங்களுக்கும் பாத்தியப்பட்டது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழாவிற்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு, கம்பம் ஊன்றி காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து, தினமும் காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி, சுவாமியை வழிபடுவர். வரும், 15ல், மறுகாப்பு கட்டப்படுகிறது. தினமும், சுவாமி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 21ல் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 22ல் அதிகாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், பூக்குழி அமைக்கும் பூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, குமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு சுவாமியை எடுத்துச் சென்று, புனித நீராடி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, மலர்களால் அலங்காரம் செய்து, 5 கி.மீ., துாரம் சப்பரத்தில் துாக்கி வந்து, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்து
கின்றனர்.
வரும், 23 அதிகாலை, 5:00 முதல், கிடாவெட்டும், காலை, 10:00 மணிக்கு, 30 அடி உயரம் கொண்ட தேரில், சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, தேர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 24 அதிகாலை, 5:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி, சிங்கார பாலியில் விடப்படும்.
இதையடுத்து, மங்கள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வினோதினி, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள்
செய்துள்ளனர்.

