sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : பிப் 19, 2024 12:26 PM

Google News

ADDED : பிப் 19, 2024 12:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசி முதல் ஞாயிறு

ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட முக்கிய தினங்களில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

அதன்படி, மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், தீபாராதனையம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தலைமலை அடிவாரத்தில் தீஎருமப்பட்டி அருகே, காவக்காரப்பட்டி தலைமலை அடிவார பகுதியில், மழையின்றி வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று அந்த வனப்பகுதியில் உள்ள காய்ந்த மரங்கள், செடிகளில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ தலைமலை அடிவாரத்தில் வாகனம் செல்ல முடியாத பகுதியில் எரிந்ததால், 2 மணி நேரம் போராடி மரக்கிளைகளை வைத்து அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

மினி ஆட்டோ

கவிழ்ந்து விபத்து

பரமத்தி அருகே, கீரம்பூரில் எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு, நேற்று பக்தர்கள் ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தனர். பின், மினி ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ளே நுழைந்த போது நிலை தடுமாறி மினிஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பயணம் செய்த நாமக்கல் அருகே, பெருமாபட்டியை சேர்ந்த கலா, 41, கிருத்திகா, 26, மாரிமுத்து, 40, தீபா, 45, ரங்கம்மாள், 51, கனகமணி, 51, மினி ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி, 47, உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டப்பணிக்கு பூமி பூஜை

நாமக்கல் ஒன்றியம், வீசாணம் பஞ்.,க்குட்பட்ட ஜெ.ஜெ., நகர், நருவலுார் பஞ்., காதப்பள்ளி பஞ்., சேவாகவுண்டம்பாளையம், மாரப்பநாயக்கன்பட்டி பஞ்., செங்கோடம்பாளையம் ஆகிய பகுதிகளில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மகளிர் ஓய்வறை, சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, அதற்கான பூமி பூஜை நடந்தது. நாமக்கல் ஒன்றிய அட்மா குழு தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். பி.டி.ஓ., பிரபாகரன், பஞ்., தலைவர்கள் நலங்கிள்ளி, நாச்சிமுத்து, தீபா, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மகளிர் ஓய்வறை, சாலை அமைக்கும் பணியை, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய பொறியாளர் பாஸ்கர், தி.மு.க., நிர்வாகிகள் பிரபாகரன், ராஜவேல், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

டூவீலர் மோதி

தொழிலாளி பலி

ப.வேலுார் தெற்கு நல்லியம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 53; விவசாயி. இவர் கடந்த, 10ல் மோகனுார் சாலையில், எம்.எல்.ஏ., அலுவலகம் பிரிவு சாலையில் நடந்து சென்றார். அப்போது,

டூவீலரில் வந்த நபர் நிலை தடுமாறி பழனிசாமி மீது மோதினார். படுகாயமடைந்த பழனிசாமியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, நேற்று பழனிசாமி இறந்தார். இதுகுறித்து புகார்படி, டூவீலர் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபரை, ப.வேலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

போதைப்பொருள்விற்ற 4 பேர் கைது

குமாரபாளையத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, காவேரி நகர் புதிய காவிரி பாலம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 4 பேரை போலீசார் கைது செய்து, 3,000 ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், குமாரபாளையம் கவுதம்ராஜ், 31, குப்புராஜ், 31, சரவணன், 39, வீரமணி, 32, என்பது தெரியவந்தது.

அடையாளம் தெரியாத கார் மோதி முதியவர் சாவு

சுண்டாங்கிபாளையத்தில், அடையாளம் தெரியாத கார் மோதி முதியவர் பலியானார்.

மல்லசமுத்திரம் அருகே, மதியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன், 73; கூலித்

தொழிலாளி. இவர், நேற்று மாலை, 6:00 மணியளவில், 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில், வையப்பமலையிலிருந்து, மல்ல

சமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சுண்டாங்கிபாளையம் பிரிவுசாலை அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், செங்கோட்டையனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குண்டுமல்லி விலை உயர்வு

எருமப்பட்டியை சுற்றியுள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி பூ பயிரிட்டுள்ளனர். கொல்லிமலை அடிவாரப்பகுதி பூக்களில் வாசனை அதிகம் உள்ளதால் மக்கள் விரும்பி வாங்கி செல்வர்.

பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து குறைந்த நிலையில், தற்போது வெயில் அதிகரித்துள்ளதால் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 3 வாரங்களாக கிலோ, 400 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ, முகூர்த்த தினத்தையொட்டி, நேற்று கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மா.கம்யூ., மூத்த நிர்வாகிநுாற்றாண்டு விழா

குமாரபாளையம் மா.கம்யூ., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமியின் நுாற்றாண்டு விழா, நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழு செயலர் கந்தசாமி கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பணிகளை செய்துகொடுத்துள்ளார். வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீடு கிடைக்க உதவி செய்தார். தொழிலாளர் பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து வைத்து, தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் சுமுக உறவை ஏற்படுத்தினார்,'' என்றார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பதி முனியப்ப சுவாமி

கோவில் திருவிழா

ப.வேலுார் அருகே, சேளூர் சாணார்பாளையத்தில் இரும்பால் ஆன, 800 கிலோ எடை கொண்ட வால் கையில் வைத்துக்கொண்டு, 42 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்ப சுவாமி சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் நடப்பாண்டும் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு காவேரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 8:00 மணிக்கு திருப்பதி முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு பக்தர்கள் திருப்பதி முனியப்ப சுவாமிக்கு கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு திருப்பதி முனியப்ப சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், 283 ஆடுகளையும் ஒன்றாக சமைத்து, பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மதியம், 1:00 மணிக்கு மறு அபிஷேகம் நடக்கிறது.

முதல்வர் குறித்து அவதுாறு: ஐ.டி., நிர்வாகிகள் புகார்

சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளிப்பாளையம் போலீசில், குமாரபாளையம் தி.மு.க., - ஐ.டி., நிர்வாகிகள் புகாரளித்தனர்.

தி.மு.க.,வின் குமாரபாளையம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், நேற்று பள்ளிப்பாளையம் இனஸ்பெக்டரை சந்தித்து, சமூக வலைதளத்தில் முதல்வர் பெயரை கெடுக்கும் வகையில் அவதுாறு பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரளித்தனர்.

கொல்லிமலையில் கலாசார திருவிழா

கொல்லிமலை, செங்கரை பகுதியில், அ.தி.மு.க., வர்த்தக அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, கலாசார திருவிழா, நேற்று நடந்தது. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஹா தமிழ்மணி, போட்டிகளை தொடங்கி வைத்தார். காலை தொடங்கிய கலாசார விழாவில், அதிகளவு குழு போட்டிகள் நடத்தப்பட்டன. கும்மி ஆட்டம், கோலாட்டம், குறவன் குறத்தி, சேர்வை ஆட்டம், ஆண்டி குலம் தெருக்கூத்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மலைவாழ் மக்கள் நுாற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 58 குழுக்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான போட்டியில், 900க்கும் மேற்பட்ட பெண்களும், 400க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாலை பரிசு வழங்கப்பட்டது. இந்த கலாசார விழாவில், மலைவாழ் மக்கள் தங்களது கலாசார உடையணிந்து வந்து நடனமாடினர்.

தமிழகத்துக்கு புதிய தலைவர்

காங்கிரசார் கொண்டாட்டம்

தமிழக காங்., கட்சி தலைவராக அழகிரி கடந்த, 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவரை மாற்றி, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழக சட்டசபை காங்., கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை, தமிழக காங்., கமிட்டி தலைவராக, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். அதற்கு வரவேற்பு தெரிவித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமையில் அக்கட்சியினர் நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள நேரு மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், முன்னாள் மாணவர் காங்., செயலாளர் பாலாஜி, நகர தலைவர் மோகன், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us