ADDED : பிப் 14, 2024 10:50 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவர், உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். அவரை சந்திக்க வந்த மர்மநபர், 'தான் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்து வருகிறேன்.
நீங்கள் விதவை பணத்திற்கு விண்ணப்பித்துள்ளீர்கள். ஆய்வு செய்ய வேண்டும்' எனக்கூறி, விபரங்களை கேட்டுள்ளார். பின், அந்த பெண்ணிடம், '5,000 ரூபாய் பணம் கொடுங்கள், உடனே உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய அந்த பெண், 5,000 ரூபாயை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட போலி அதிகாரி, 'நான் பள்ளிப்பாளையம் அலுவலகத்திற்கு செல்கிறேன். நீங்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விடுங்கள்' என, தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து, அப்பெண் தன் மகனிடம் தெரிவித்துள்ளார். அவர் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து விசாரித்துள்ளார். அப்போது, அதிகாரி போல் வந்தவர், போலி என தெரிய வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலு கூறியதாவது: அதிகாரிகள் என கூறிக்கொண்டு பணம் கேட்டால், பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷன், வருவாய் ஆய்வாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

