/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வரிசை கட்டி நிற்கும் அடிப்படை பிரச்னைகள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
/
நாகை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வரிசை கட்டி நிற்கும் அடிப்படை பிரச்னைகள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வரிசை கட்டி நிற்கும் அடிப்படை பிரச்னைகள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வரிசை கட்டி நிற்கும் அடிப்படை பிரச்னைகள் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 16, 2024 11:57 PM

நாகப்பட்டினம்: ரூ.366.85 கோடியில் கட்டப்பட்டுள்ள, நாகை மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் நிலவும் பிரச்னைகளை தீர்த்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை துவக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மத்திய அரசின் அனுமதியை பெற்று, மருத்துவக் கல்லுாரிக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதுமான இடம் இல்லை என்று கூறி, நாகையில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உள்ள ஒரத்துாரில் 60.04 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அப்போதே, நிலத்தடி நீர் வளம், சாலை வசதி இல்லாத இடத்தில் மருத்துவக் கல்லுாரி அமைந்தால் பொதுமக்களும், நோயாளிகளும் சிரமத்துக்கு உள்ளாவர் என எதிர்ப்பு எழுந்தது.
பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், ஒரத்துாரில் ரூ.366.85 கோடியில் மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, காணொளி வாயிலாக, நாகை மருத்துவக் கல்லுாரியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஒரு ஆண்டிற்கு 150 மாணவர்கள் வீதம் 450 பேர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று, நாகை அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி வளாகத்துக்கு முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டது.
இருந்தபோதும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே மகப்பேறு, குழந்தைகள் பிரிவும், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவசர சிகிச்சை, புற நோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் இருப்பதில்லை.
பணியிலிருக்கும் மருத்துவ மாணவர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை ஒரத்துாரில் உள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீட்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனால், நோயாளிகள், அவர்களுடன் தங்கி உள்ளவர்கள் கழிவறைக்கு செல்லக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணாமல் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பிரச்னையை மூடி மறைப்பதில் கவனம் செலுத்துவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நாகை - வேளாங்கண்ணி சாலையில் இருந்து ஒரத்துாருக்கு 3 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கும் பணிகள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறும்போது, 'குக்கிராமமான ஒரத்துாரில் தங்கும் வசதி, உணவு போன்ற எதுவும் கிடைக்கவில்லை. கல்லுாரிக்கு செல்லும்குறுகலான சாலை இரவில் கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. நாகை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் செல்வதற்கு 400 ரூபாய், திரும்புவதற்கு 400 ரூபாய் செலவாகிறது' என்றனர்.
நாகை மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த மாதம் 26ம் தேதி, எம்.எஸ்சி., படித்த எங்கள் கிராமத்தை சேர்ந்த அபர்ணா விஷம் குடித்து விட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. ஒரத்துார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். நான்கு நோயாளிகள் சேர்ந்தால் தான் 108 ஆம்புலன்சை இயக்க முடியும் என டிரைவர் கூறினார். கால தாமதத்தால் அபர்ணா இறந்தார். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மாதந்தோறும் மருத்துவமனையில் இலவசமாக வழங்கி வந்த மருந்துகளைகூட ஒரத்துார் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆட்டோவில் ஒரத்துார் சென்று வர 800 ரூபாய் செலவாகும் என்பதால் முதியோர்கள் மருந்துகள் வாங்கச் செல்வதில்லை.
பாலமுருகன்,
நம்பியார் நகர் மீனவ பஞ்சாயத்து.
மருத்துவக் கல்லுாரிக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் இயக்குவதாக கூறினர். ஆனால் இயக்கவில்லை. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், மருத்துவ மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ரஜினிகாந்த், சமூக சேவகர்.

