/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கார் - லாரி மோதலில் குழந்தை உட்பட 5 பேர் பலி
/
கார் - லாரி மோதலில் குழந்தை உட்பட 5 பேர் பலி
ADDED : செப் 13, 2024 02:04 AM

பரங்கிப்பேட்டை:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர், 56.
இவர், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க, தன் உறவினர்களான நக்கம்பாடியைச் சேர்ந்த ஹாஜிரா பேகம், 62, திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அராபத் நிஷா, 30, அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகியோருடன், 'ஸ்விப்ட் டிசையர்' காரில் நேற்று முன்தினம் சென்றார்.
கும்பகோணம் அடுத்த கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத், 40, காரை ஓட்டினார். சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கடலுார் அடுத்த சிதம்பரம் அருகே, பு.முட்லுார் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வந்தபோது, எதிரே காரைக்காலில் இருந்து ஹைதராபாத்திற்கு சோப்பு ஆயில் ஏற்றிச்சென்ற லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது.
நான்கு வழிச்சாலையில், ஒரு பக்கம் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியும் அதிக வெளிச்சம் இல்லாமல் இருந்தது.
இதனால் ஏற்பட்ட விபத்தில், காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரில் வந்த குழந்தை உட்பட ஐந்து பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பரங்கிப்பேட்டை போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
லாரி டிரைவர் துாக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததால் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், பேரளத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

