/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்த மருந்தாளுனர் பணியிடம் நிரப்புவது எப்போது
/
சித்த மருந்தாளுனர் பணியிடம் நிரப்புவது எப்போது
ADDED : டிச 23, 2025 06:56 AM
மதுரை: தமிழகத்தில் ஆண்டுதோறும் 200 பேர் ஒருங்கிணைந்த மருந்தாளுனர் (ஆயுஷ்) டிப்ளமோ இரண்டாண்டு படிப்பு முடித்து வெளியேறினாலும் சித்த மருந்தாளுனர் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை; புதிய பணியிடங்களையும் உருவாக்கவில்லை.
தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் (ஆயுஷ்) கீழ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 800 சித்த மருத்துவப் பிரிவுகளில் 150 சித்த மருந்தாளுனர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி துறைகளில் உள்ள மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருந்தாளுனர் (ஆயுஷ்) டிப்ளமோ படித்து முடித்தவர்கள் தான் இப்பணிக்கு தேர்வாகின்றனர். சென்னை, திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில் ஆண்டுக்கு 200 பேர் படிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருந்தாளுனர்கள் இல்லை. ஆயுஷ் டாக்டர்கள் மருத்துவப் பரிசோதனை செய்த பின் மருந்தாளுனர்கள் மருந்துகளை வழங்க வேண்டும். மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் டாக்டரே இரண்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியுள்ளது. எனவே சித்த மருந்தாளுனர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

