/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருவூலத்துறையுடன் நிதித்துறையின் பிறதுறைகளை இணைக்கக் கூடாது கருவூல, கணக்குத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
/
கருவூலத்துறையுடன் நிதித்துறையின் பிறதுறைகளை இணைக்கக் கூடாது கருவூல, கணக்குத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
கருவூலத்துறையுடன் நிதித்துறையின் பிறதுறைகளை இணைக்கக் கூடாது கருவூல, கணக்குத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
கருவூலத்துறையுடன் நிதித்துறையின் பிறதுறைகளை இணைக்கக் கூடாது கருவூல, கணக்குத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2024 05:01 AM
மதுரை : நிதித்துறையின் பிறதுறைகளை கருவூலத்துறையுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்'' என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி, பொதுச் செயலாளர் லெனின் கூறியிருப்பதாவது: கருவூலத்துறை ஊழியர்கள் மிகுதியான காலிப்பணியிடங்கள் உள்ளதால் மன உளைச்சலுடன் பணியாற்றுகின்றனர். 40 சதவீதத்திற்கு மேல் இளநிலை உதவியாளர், கணக்கர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இந்நிலையில் கருவூலத்துறையுடன் மற்ற நிதித்துறைகளை இணைப்பது அதிர்ச்சியாக உள்ளது.
இவ்வாறு இணைப்பதால் கூடுதல் பணிச்சுமையையே ஏற்படுத்தும். மேலும் பணிமூப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படும். எனவே இதனை தவிர்க்க வேண்டும். தற்போதைய ஆணையர் பணிமாறுதல்கள், பதவி உயர்வில் மருத்துவ ரீதியாகவும், குடும்பச் சூழல் காரணமாகவும் பதவி உயர்வு துறப்பு கடிதம் வழங்கும்போது, அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
நடை முறைகளையும் கடை பிடிப்பதில்லை என்பதால் அனைத்து திட்டங்களிலும் பல்வேறு குளறுபடிகள் மிஞ்சியுள்ளது. உதாரணமாக வருமான வரி ஓய்வூதியதாரர்களுக்கும் பிடித்தம் என்பதை நடைமுறைப்படுத்தியது, ஓய்வூதியர்களுக்கு மாதாமாதம் நேர்காணல் செய்வது, இணையதள வழியாக ஓய்வூதிய பலன்களை அனுப்புதல் உள்ளவற்றில் நடைமுறை சிக்கலை புரிந்து கொள்ளாததை கூறலாம். இவை அனைத்தையும் கருவூலம் வழியாகவே செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பதால் மற்ற துறைகளுடன் முரண்பாடு ஏற்படுகிறது. இதனால் அரசு எதிர்பார்க்கும் எந்த விளைவும் ஏற்படவில்லை.
எந்த திட்டத்திற்கும் புதிய பணியிடங்களை உருவாக்காமல், மேல்நிலையில் மட்டும் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், கணக்கு அலுவலர் பணியிடங்களை மட்டும் உருவாக்கிவிட்டு, அவற்றை செய்வதற்குரிய பணியிடங்களை உருவாக்ககாமல் உள்ளனர்.
இச்சூழலில் பிறதுறைகளை கருவூலத்துறையுடன் இணைப்பதற்கு அரசு பரிந்துரைப்பது ஏற்புடையதல்ல. இதனால் மக்கள், ஊழியர்கள் மத்தியிலும் அரசின் மீது அதிருப்தி ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நிதித்துறையில் உள்ள மற்ற துறைகளை கருவூலத்துறையுடன் இணைக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும். கைவிடாத பட்சத்தில் போராடுவதைதத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

