/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ந(க)ஷ்டப்படுவதே வேலையா... நோய் தாக்குதலால் நெல் விவசாயிகள் ஆதங்கம்: வருமுன் காப்பதற்கு வேளாண் துறை தயாரில்லை
/
ந(க)ஷ்டப்படுவதே வேலையா... நோய் தாக்குதலால் நெல் விவசாயிகள் ஆதங்கம்: வருமுன் காப்பதற்கு வேளாண் துறை தயாரில்லை
ந(க)ஷ்டப்படுவதே வேலையா... நோய் தாக்குதலால் நெல் விவசாயிகள் ஆதங்கம்: வருமுன் காப்பதற்கு வேளாண் துறை தயாரில்லை
ந(க)ஷ்டப்படுவதே வேலையா... நோய் தாக்குதலால் நெல் விவசாயிகள் ஆதங்கம்: வருமுன் காப்பதற்கு வேளாண் துறை தயாரில்லை
ADDED : ஆக 09, 2025 04:02 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக நெற்பயிர்களில் பாக்டீரியா, வைரஸ் நோய்களின் தாக்கம் அதிகரித்து மகசூல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறை வைரஸ் தாக்கத்துடன் களைகள் அதிகமாக வளர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இருபோக சாகுபடி பகுதிகளுக்கான முதல்போக நெல் சாகுபடிக்கான பாசன நீர் ஜூலை முதல்வாரம் திறக்கப்பட்டது. தற்போது நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நிலையில் களைகளும் நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: நெற்பயிருடன் சேர்ந்தே கோதுமைப்புல் எனப்படும் களைகள் வளர்ந்துள்ளன. இவை நெற்பயிர்களை அமுக்கி விடுவதால் மகசூலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாற்று நட்ட 20வது நாளில் இருந்தே வளர்கிறது. களைக்கொல்லி மருந்துக்கும் கட்டுப்படவில்லை. கையால் களை எடுப்பதென்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகிறது. கள்ளந்திரி பாசன சாகுபடி பகுதிகளில் களை பாதிப்பு அதிகமாக உள்ளது.
சோழவந்தான் நெடுங்குளம், தேனுார் பகுதிகளில் 50 ஏக்கருக்கு மேலான பரப்பில் உள்ள நெற்பயிர்களில் செவட்டை எனும் வைரஸ் நோய் தாக்கியுள்ளது. நாற்று நட்ட 35வது நாளில் நோய் தாக்குதல் ஏற்பட்ட நிலையில் மருந்து தெளித்தும் பயனில்லை. தற்போது 90 நாட்களாகி கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் பயிர்கள் தரையோடு கருகி போயுள்ளது. வயலை சென்று பார்க்கவே வேதனையாக உள்ளது. கடந்தாண்டு ஏக்கருக்கு 40 முதல் 46 மூடை நெல் எடுத்த விவசாயிகள் இந்த முறை ஏக்கருக்கு 5 மூடை பெறுவதே சிரமம் தான். இது அறுப்பு கூலிக்கு தான் சரியாக வரும். நாங்கள் உழைத்ததற்கும் செலவு செய்து நட்டு பராமரித்ததற்கும் நஷ்டம் தான்.
வருமுன் காக்கலாமே இரண்டாவது ஆண்டாக வைரஸ் நோய் தாக்கம் மதுரையில் காணப்படுகிறது. மதுரையில் இருபோக சாகுபடி, ஒருபோக சாகுபடி, குறுவை சாகுபடி என உள்ளது. ஒவ்வொரு சாகுபடி முன்பாக பயிர் நடைமுறைகள், நோய் தாக்கம், அதற்கு முன்கூட்டிய மருந்து, களைக்கொல்லி பயன்பாடு குறித்து வேளாண் துறையினரும், வேளாண் அறிவியல் நிலையத்தினரும் முன்கூட்டியே ஆலோசனை சொல்வதில்லை. விவசாயிகளுக்கான முகாம் அமைத்து ஆலோசனை சொல்லும் போது மற்ற விவசாயிகளும் தாங்கள் பின்பற்றும் உத்திகளை தெரிவிக்கும் போது சாகுபடிக்கு பயன்படும். நோய் வந்து பாதிப்பு ஏற்பட்ட பின் வயலைப் பார்க்க வருவதால் யாருக்கும் பயனில்லை. கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. இந்தமுறையும் இழப்பை சந்தித்தால் அடுத்த முறை நெல் விவசாயம் செய்யவே நாங்கள் பயப்படும் நிலை ஏற்படும்.
முன்பு போல வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகள் வயலை அடிக்கடி பார்வையிட்டு நோய், வைரஸ் தாக்கம் வருமுன் ஆலோசனை சொல்ல வேண்டும். சாகுபடிக்கு முன்பாக கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

