/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரி பகுதியில் மழையின்றி முற்றி வீணாகும் நெல் நாற்றுகள்
/
மானாவாரி பகுதியில் மழையின்றி முற்றி வீணாகும் நெல் நாற்றுகள்
மானாவாரி பகுதியில் மழையின்றி முற்றி வீணாகும் நெல் நாற்றுகள்
மானாவாரி பகுதியில் மழையின்றி முற்றி வீணாகும் நெல் நாற்றுகள்
ADDED : டிச 27, 2025 06:38 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மானாவாரி கண்மாய் பகுதிகளில் மழை இல்லாததால் கண்மாய் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள 1,500 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி தயாரித்த நாற்றுக்கள் முற்றி வீணாகி விட்டன.
விவசாயிகள் சிவராமன், பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர் புளியங்குளம், வடபழஞ்சி, கரடிப்பட்டி உள்பட 10 மானாவாரி கண்மாய்கள் உள்ளன.
இக்கண்மாய்கள் மூலம் 1,500 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு மழை இல்லாததால் இக்கண்மாய்கள் வறண்டுள்ளன. இந்தத் தண்ணீரை மட்டுமே நம்பிய விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
அப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் மட்டும் நெல் நடவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு லேசாக பெய்த மழையால் கண்மாய்களுக்கு சிறிதளவு தண்ணீர் வந்தது.
அப்பகுதி கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் நிரம்பியது. அதனால் கண்மாய் பாசன விவசாய நிலங்களில் ஓரளவுக்கு நெல் நடப்பட்டது.
இந்தாண்டு மழை முற்றிலும் பொய்த்து விட்டதால் இந்தப் பகுதி ஆழ்குழாய்கள், கிணறுகளிலும் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கிணற்று நீரை நம்பியுள்ள விவசாயிகளும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு மிகக் குறைந்த அளவிலேயே நெல் நடவு செய்துள்ளோம்.
நெல் நடவுக்காக நாற்றாங்கால் அமைத்தல், விதை நெல், உரத்திற்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நாற்றுப் பாவி 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நாற்றுகள் அனைத்தும் முற்றிவிட்டன. இனி அந்த நாற்றுக்களைக் கொண்டு நடவு செய்ய முடியாது. அரசு மானியம் வழங்க வேண்டும். மானாவாரி பகுதிக்கும் வைகை தண்ணீர் கிடைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் வருமானம் பெற முடியும் என்றனர்.

