புதிய ரோடு கிடைக்குமா
மதுரை வார்டு எண் 2 ல் சாந்தி நகர் ஆர்.எம்.எஸ்., காலனி 1 முதல் 4 தெருக்கள், பாலத்தின் இரு புறமும் உள்ள பகுதியிலும் சீரற்ற ரோடுகள் உள்ளன. பள்ளம், மேடாக உள்ளதால் வாகனத்தில் செல்கையில் தடுமாறி விழுகிறோம். பல முறை புகார் செய்தும் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை.
- -பாலநரசிம்மலு, ஆர்.எம்.எஸ்., காலனி.
ரோட்டில் பள்ளம்
மதுரை கடச்சனேந்தல் நேதாஜி நகரில் தொலை தொடர்புத் துறை தோண்டிய பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள், வயதோனார் தடுமாறுகின்றனர். வாகனங்களும் உள்ளே சிக்குகின்றன. வேலையை முடிக்க வேண்டும் இல்லையென்றால் ரோட்டை சமன்படுத்த வேண்டும்.
- -ராஜா, நேதாஜி நகர்.
சிக்னலால் தொல்லை
மதுரை காளவாசல் சந்திப்பில் காலை, இரவில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிக்னல் சுழற்சி முறையும் சரியாக இல்லை. சிக்னலில் உள்ள சிக்கலை சரிசெய்ய வேண்டும். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன், காளவாசல்.
குப்பையால் நோய்த்தொற்று
சோழவந்தான் அருகே தென்கரையில் வைகை ஆற்றின் இணைப்பு பகுதியான நிலையூர் கால்வாய் பாலம் அருகே குப்பை கொட்டுகின்றனர். அதனை தீவைத்து எரிக்கவும் செய்வதால் புகை மூட்டமாக உள்ளது. துர்நாற்றம், புகையால் மூச்சுத்திணறல் என தொந்தரவாக இருக்கிறது. குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை தேவை.
--கவுரிநாதன், தென்கரை.
தெருநாய்கள் தொந்தரவு
மூன்றுமாவடி பரசுராமன் பட்டியில் தெருநாய்கள் தொல்லையைத் தாங்க முடியவில்லை. பலரை கடித்துள்ளதாக மாநகராட்சியில் புகார் அளித்தும் தீர்வு இல்லை. ரோட்டில் திரியும் மாடுகள் வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்துகின்றன. போக்குவரத்துக்கு இடையூறான அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சந்தனகருப்பன், பரசுராமன்பட்டி.

