/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு; மேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
/
மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு; மேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு; மேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு; மேயரின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : செப் 11, 2025 05:20 AM
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரனின் ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இம்முறைகேடு தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை டி.ஐ.ஜி.,அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 23 பேர் கைதாகினர். இவர்களில் கம்ப்யூட்டர் புரோகிராம் உதவியாளர்கள் ரவி, கருணாகரன், ஒப்பந்த ஊழியர்கள், புரோக்கர்கள் உட்பட 9 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது.கைதான மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், பில்கலெக்டர் ரவிச்சந்திரன் ஜாமின் அனுமதிக்கக் கோரி மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். அரசு மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி வாதிட்டதாவது:ரவிச்சந்திரன் தனக்கு கீழ் தனிப்பட்ட முறையில் ஜமால் நஜீம் என்பவரை பணியில் ஈடுபடுத்தினார். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. அவர் மூலம் கணினி பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி 33 சொத்து வரி கணக்குகளில் திருத்தம் செய்தார். ரவிச்சந்திரனின் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. அதிலுள்ள வரி குறைப்பு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது.காளவாசல் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி வணிக கட்டடத்திற்கு ரூ.50 லட்சம் வரி நிர்ணயித்திருக்க வேண்டும். அதற்கு பொன்வசந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி வரி குறைப்பு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ.10 லட்சம், உதவி கமிஷனராக இருந்த ஒருவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆதாயம் அடைந்துள்ளனர். பொன்வசந்த் 1வது மண்டலத்தில் பணியாற்றிய செந்தில்குமரன் என்பவரை 3வது மண்டலத்திற்கு உதவி வருவாய் அலுவலராக மாற்ற ஏற்பாடு செய்துள்ளார்.
ரவி என்பவரின் மனைவியை மேயருக்கு உதவியாளராக நியமித்துள்ளார்.மனுதாரர்கள் இருவரும் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும். விசாரணையை பாதிக்கும். இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தார்.நீதிபதி,'பொன்வசந்த், ரவிச்சந்திரனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார்.மதுரை மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணிபுரிந்தவர் சுரேஷ்குமார். இடமாறுதலில் துாத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்தார்.
இவ்வழக்கில் கைதான அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவரது தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை நீதிபதி இன்று (செப்.11) ஒத்திவைத்தார்.