/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ஆவின் பால் முகவர்கள் போர்க்கொடி 'விக்கெட் விழக்கூடாது' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்
/
மதுரை ஆவின் பால் முகவர்கள் போர்க்கொடி 'விக்கெட் விழக்கூடாது' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்
மதுரை ஆவின் பால் முகவர்கள் போர்க்கொடி 'விக்கெட் விழக்கூடாது' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்
மதுரை ஆவின் பால் முகவர்கள் போர்க்கொடி 'விக்கெட் விழக்கூடாது' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்
UPDATED : டிச 31, 2025 08:04 AM
ADDED : டிச 31, 2025 06:16 AM

மதுரை: மதுரையில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கும்போது வாகன டிரைவர்கள் 'பால் மாமூல்' (பால் பாக்கெட்டை கட்டாயமாக எடுத்துக்கொள்வதால் ஒரு பாக்கெட் 'அவுட்' ஆவதை குறிக்கும் வகையில் விக்கெட் என்கின்றனர்) கேட்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும். சேதமடையும் பாக்கெட்டுகளை அந்தந்த மண்டல அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளும் வசதி செய்ய வேண்டும் என முகவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மதுரையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் விற்கப்படுகிறது. இந்த விற்பனையில் முகவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பல்வேறு அளவு, பெயர்களில் பல லட்சம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக 63 'ரூட்'களில் தனியார் ஒப்பந்த வாகனங்களில் டிப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. இதில் டிரைவர்கள் பால் பாக்கெட் மாமூல் கேட்கும் போது அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது. தவிர சேதமடைந்த பாக்கெட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்த வகையில் முகவர்களுக்கு தினமும் நஷ்டம் ஏற்படுவது பெரும் சவாலாக உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் சில்லரை முகவர்கள் நலச்சங்க தலைவர் சாமி தலைமையில் நிர்வாகிகள் பெருமாள், சங்குராஜா உள்ளிட்டோர் பொது மேலாளர் சிவகாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஒரு பால் பாக்கெட்டுகள் வினியோக வாகனம் குறைந்தது 16 டிப்போக்களில் பாக்கெட்டுகளை வினியோகிக்கிறது. ஒரு டிப்போவில் ஒரு பால் பாக்கெட் வீதம் 16 பாக்கெட்டுகளை அந்த வாகன டிரைவர் மாமூலாக எடுத்துக்கொள்கிறார்.
இதன் மூலம் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.22 நஷ்டம் ஏற்படுகிறது. தவிர ஒரு கிரேடில் குறைந்தது 2 பால் பாக்கெட்டுகள் 'லீக்' ஆகின்றன. அதை திரும்ப கொடுக்க ஆவின் மெயின் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.
இதை அந்தந்த மண்டல அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ளும் வசதி செய்ய வேண்டும்.கோல்டு வகை பாலுக்கு முன்பு இருந்தது போல் கமிஷனை ரூ.3ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
குறிப்பாக பால் பாக்கெட் மாமூல் முறையை ஒழிக்க வேண்டும். இதுகுறித்து பொது மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எதிர்பார்க்கிறோம் என்றனர்.

