என்னை முதலில் ஆடிசன் செய்தது மம்முட்டி தான் மாளவிகா
துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போலே' படத்தில் நாயகியாக களமிறங்கினார் மாளவிகா மோகனன். இந்த படத்திற்கு இவரை தேர்வு செய்தது துல்கரின் அப்பா, நடிகர் மம்முட்டி. இதுபற்றி மாளவிகா வெளியிட்ட பதிவில் “எனது முதல் ஆடிசன் இதுதான். யாருக்காவது இப்படி ஒரு ஜாம்பவான் நடிகர் தனது ஆடிசனுக்கான போட்டோவை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா. இந்த படத்திற்கு நாயகி வேண்டும் என தேடிய போது என்னை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து மம்முட்டி தான் புகைப்படம் எடுத்தார். அவர்தான் இதில் நான் நடிப்பதற்கும் ஓகே சொன்னார்” என குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' தயாரிப்பாளர்களை குற்றம் சொல்லும் போனி கபூர்
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இதில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஸ்ரீதேவி. ஆனால் சில பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதுபற்றி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது ஒரு பேட்டியில் கூறும்போது ''இந்த விஷயத்தில் பாகுபலி தயாரிப்பாளர்கள் தான் குற்றவாளிகள் என அவர்களின் முகத்திற்கு நேராகவே சொல்வேன். சம்பளம் குறைவாக தருவதாக சொன்னார்கள். அவருக்கு உரிய மரியாதை தரவில்லை. ஸ்ரீதேவி பற்றி ராஜமவுலியிடம் தயாரிப்பாளர்கள் தவறான தகவலை தந்தனர்'' என கடுமையாக பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த 3 படங்கள் விபரம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அவரின் 25வது படமாக 'பராசக்தி' உருவாகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் மூன்று படங்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதலில் ஏற்கனவே தன்னை வைத்து 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு, அதன்பின் புஷ்கர் - காயத்ரி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கிறார்.
கடவுள் கொடுத்த பரிசு ரசிகர்கள்: தேஜு அஸ்வினி
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் செப்., 12ல் ரிலீஸாகிறது. தேஜு கூறுகையில் ''எதிர்பாராத விதமாகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது சினிமாதான். அதற்கு என்றும் உண்மையாக இருப்பேன். பல படங்கள் நடித்த பிரபலங்களுக்கு கூட கிடைக்காத ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். அதனை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். காதல் போல ஆக் ஷன் வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்'' என்கிறார்.
செப்., 14ல் இட்லி கடை இசை வெளியீடு
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. நித்யா மேனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகிறது. அக்., 1ல் படம் ரிலீஸாகும் சூழலில் செப்., 14ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடக்கிறது.
இளையராஜாவிற்கு செப்.13ல் பாராட்டு விழா
இசையமைப்பாளர் இளையராஜா திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக்காகவும், சிம்பொனி இசைக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் 2ல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பின்னர் அந்த விழா தள்ளி வைக்கப்பட்டது. இப்போது செப்., 13ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனராம்.
விபத்தா... காஜல் அகர்வால் விளக்கம்
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்தி பரவிய நிலையில் காஜல் வெளியிட்ட பதிவு : ''நான் விபத்தில் சிக்கியதாக ஆதாரமற்ற செய்திகள் பரவுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கடவுள் அருளால் நான் நலமாக, உயிருடன், பாதுகாப்பாக உள்ளேன். இதை தெரிவிக்கவே இந்த விளக்கம். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.