/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் துறைக்கு ஒதுக்கிய நிலம் போதாது மாஸ்டர் பிளான் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
/
தொழில் துறைக்கு ஒதுக்கிய நிலம் போதாது மாஸ்டர் பிளான் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
தொழில் துறைக்கு ஒதுக்கிய நிலம் போதாது மாஸ்டர் பிளான் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
தொழில் துறைக்கு ஒதுக்கிய நிலம் போதாது மாஸ்டர் பிளான் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
ADDED : மார் 07, 2024 05:46 AM

மதுரை: ''தொழில்துறைக்கு ஒதுக்கிய 4.47 சதவீதம் நிலம் போதுமானதாக இல்லை'' என மதுரையில் நடந்த மாஸ்டர் பிளான் கருத்து கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையில் 30 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியின் 72 வார்டுகளுக்கு மட்டும் மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது மாவட்டம் முழுவதற்கும் 30 ஆண்டுகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் மாஸ்டர் பிளானை உருவாக்கியுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துக்கள், 316 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து கலெக்டர் சங்கீதா பேசியதாவது: புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தில் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருந்தால் ஆவணங்களுடன் 40 நாட்களுக்குள் அனுப்பினால், பிளானில் திருத்தம் செய்யப்படும், என்றார்.
மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன்: அடுத்த 20 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் துறைக்கு நிலம் மிக குறைவாக உள்ளது. சுற்றுலா, ஹவுசிங் லேண்டுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவாக 4.47 சதவீத நிலத்தை வைத்து தொழில்துறையை எவ்வாறு மேம்படுத்த முடியும். நெடுஞ்சாலைகளின் இரு புறமும் 50 மீட்டர் வர்த்தக நிலமாக மாற்ற வேண்டும், என்றார்.
பதிலளித்த ஆட்சியர் சங்கீதா, 'இருபது ஆண்டுகளில் எதிர்பார்த்த தொழில் வளர்ச்சியில்லை. அந்த அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு கூடுதல் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
உள்ளூர் திட்டக்குழும துணை இயக்குனர் மஞ்சு பேசுகையில், ''மதுரை மாவட்டம் திருமங்கலத்தை நோக்கி விரிவடைய அதிக வாய்ப்புள்ளதால்தான் அந்த நகராட்சி இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது '' என்றார்.
தொழில் வர்த்தக சங்கத் துணைத்தலைவர் செல்வம் பேசியதாவது: கருத்துக்களை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். நிறைய தொழிற்சாலை நிலங்கள், வேளாண் நிலமாக மாற்றப்பட்டுள்ளது. குடியிருப்புகள், வர்த்தக நிலம் சேர்ந்த நிலத்தில் குளறுபடிகள் உள்ளன'' என்றார்.
பொதுமக்களில் சிலர் கூறுகையில், ''மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கண்துடைப்பாக நடத்தினர். அதில் கட்டிய பெரியார் பஸ்ஸ்டாண்ட், வைகை ஆறு சாலைகள் உள்பட எதுவும் பயனுள்ளதாக இல்லை. அதுபோல் இத்திட்டத்திலும் அவசரமாக கருத்து கேட்டு முடிக்க நினைக்கிறது. திட்டத்தை முடிவு செய்துவிட்டு, கருத்து சொல்லும்படி கூறுகிறீர்கள்'' என்றனர்.
இதற்கு துணை இயக்குனர் மஞ்சு, ''எந்தெந்த நிலம் ஒதுக்கீட்டில் ஆட்சேபனை இருக்கிறது, அதன் சர்வே நம்பர் எதுவென ஆன்லைனிலும் அனுப்பலாம்'' என்றார்.
கலெக்டர் சங்கீதா பேசுகையில், ''கூடுதல் நாள் அவகாசம் வழங்குவது குறித்து அரசிடம் பேசி முடிவெடுக்கப்படும். மாஸ்டர் பிளான் திட்டம் மதுரைக்கு மட்டுமானது இல்லை. திருச்சி உள்பட பல நகரங்களுக்கும் சேர்த்துதான் அரசு, இந்த அவகாசத்தை வழங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் காலஅவகாசம் வழங்குவது சிரமம். இருந்தாலும் பேசிப்பார்ப்போம்'' என்றார்.

