ADDED : டிச 16, 2024 06:37 AM
அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய குடிநீர் மற்றும் தொட்டி வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் நடக்கும் இறுதிச்சடங்குகளை செய்யும் இடத்தில் தண்ணீர் வசதியில்லை.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பரவை ரோட்டில் இருந்த போர்வெல் சில ஆண்டுகளுக்கு முன் பழுதானது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியும் மாயமானது.
வி.சி.க., நிர்வாகி மணி கூறுகையில், ''அடிகுழாயாக இருந்தபோது பயன்படுத்தி வந்தோம். 2014ல் அமைத்த தண்ணீர் தொட்டி தற்போது இல்லை. எனவே 4 ஆண்டுகளாக டிரம்மில் தண்ணீரை கொண்டு சென்று இறுதிச் சடங்கிற்கு பயன்படுத்துகிறோம். தண்ணீர் தொட்டி கேட்டு ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம், கலெக்டரிடம் மனுக்கள் அளித்துள்ளேன் என்றார்.

