/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதி கிடைத்தும் பாலம் கட்டாமல் அலைக்கழிப்பு
/
நிதி கிடைத்தும் பாலம் கட்டாமல் அலைக்கழிப்பு
ADDED : அக் 25, 2024 05:28 AM
மதுரை: 'இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித்தர கலெக்டர் நிதி ஒதுக்கியும் வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை' என பாரதிய கிசான் சங்க இணைச்செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வாடிப்பட்டியில் நெடுங்குளம், புதுக்குளம் கண்மாய்க்கு செல்லும் ரோட்டில் திருமால் நத்தம் சங்கரன் கண்மாய் வடிகால் மழைநீர் செல்வதற்கு பைப் லைன்கள் பதிக்கப்பட்டிருந்தது. 2022 நவம்பரில் பெய்த கனமழையில் பைப்லைன் அடித்துச் செல்லப்பட்டதோடு ரோடும் பாதியளவு சேதமடைந்தது.
புதுக்குளம் கண்மாய் பாசனம் 100 ஏக்கரில் தென்னை, வாழை, நெல் விவசாயம் நடக்கிறது. ரோடு சேதமடைந்ததால் அறுவடையான நெல், தேங்காய், வாழைத்தார்களை டிராக்டரில் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம்.
கலெக்டரிடம் மனு கொடுத்தபோது 2023 ஜூலை 24 ல் ரூ.6.75 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்க உத்தரவிட்டார். இந்த இடம் திருவேடகம் பஞ்சாயத்து திருமால்நத்தம் எல்லையில் உள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் பால வேலை நடக்காததால் ஒதுக்கிய தொகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்குளம் புதுக்குளம் கண்மாயில் தார்ரோடு அமைக்க ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.10 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது.
இப்பணி துவங்கும் முன்பு பாலம் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

