ADDED : டிச 13, 2025 06:30 AM

மேலுார்: தும்பைபட்டியில் கால்வாய் உடைப்பை நீர்வளத்துறையினர் சரி செய்யாததால் பயிருக்குள் தண்ணீர் தேங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
புலிப்பட்டி - குறிச்சிபட்டிக்கு செல்லும் 12 வது பிரதான கால்வாயில் 1வது கால்வாய் வழியாக வரும் தண்ணீர் பூதமங்கலம் வரை செல்கிறது.
இக்கால்வாய் தண்ணீரை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இதில் தும்பைபட்டியில் அப்புச்சி கண்மாய்க்கு செல்லும் கால்வாயை நீர் வளத்துறையினர் பராமரிக்காததால் 7 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வயலுக்குள் தேங்கி கிடக்கிறது.
விவசாயி மோகன்தாஸ்: ஏக்கருக்கு ரூ. 25 ஆயி ரம் செலவு செய்து நெல் பயிரிட்டு 65 நாட்களாகிறது.
வயலுக்குள் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பயிர்களின் மேல் பகுதி கருகியும், துார் பகுதி அழுக ஆரம்பித்துள்ளது. அதனால் நீர்வளத்துறையினர் கால்வாய் உடைப்பை சரி செய்வதோடு, வயலுக்குள் தேங்கி கிடக்கும் தண்ணீர் வெளியேற வழி செய்ய வேண்டும்.
தவிர வேளாண் துறையினர் பயிர்கள் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
நீர்வளத்துறையினர் கூறுகையில், 'ஒரு வாரத்திற்குள் கால்வாய் உடைப்பு சரி செய்யப்படும்' என்றனர்.

