/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு... 'பாடம் எடுத்த' கலெக்டர்: ஒற்றை வரி வேண்டாம்; விவரங்களுடன் வர கண்டிப்பு

ADDED : செப் 13, 2025 04:34 AM

மதுரை: மதுரையில் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்த கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த பதில்கள் திருப்தியளிக்காததால் 'அடுத்த கூட்டத்திற்கு தயாராக வாருங்கள்' என கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாதந்தோறும் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தை கலெக்டர் நடத்துகிறார். நேற்றுமுன்தினம் இக்கூட்டத்தில் சி.இ.ஓ., ரேணுகா, டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், இந்திரா, கணேசன், சிவக்குமார், கார்மேகம், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர், உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். கல்வித்துறையுடன் தொடர்புடைய பொதுப் பணித்துறை, போக்குவரத்து, மின்வாரியம், பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் கேட்டார். அப்போது, தலைமையாசிரியரை கேட்டுத் தெரிவிப்பதாக அதிகாரி பதில் அளித்தார். அதுபோல் மாணவர்கள் இடைநிற்றல், மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஆபத்துக் கட்டடங்களை அகற்றுவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் குறித்து கலெக்டர் எழுப்பிய கேள்விகளுக்கு பெரும்பாலும் முழுமையான பதில்களை அளிக்க முடியாமல் கல்வி அதிகாரிகள் திணறினர். அதிகாரிகள் சிலர் கூட்டப் பொருட்கள் (அஜெண்டா) குறித்து சரியாக தெரிந்து கொள்ளாமல் பங்கேற்றது குறித்து கலெக்டர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் தேர்ச்சி குறைவான பள்ளி தலைமையாசிரியர்களிடம் காரணங்கள் கேட்கப்பட்டன. சில பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருக்கும் நிலையில், கூடுதலான கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அதற்கு, 'கட்டடம் தேவையுள்ள பள்ளிகள் குறித்து சி.இ.ஓ., விடம் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும்' என பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டம் முடிவில், அடுத்த கூட்டத்திற்கு வரும்போது கூட்டப் பொருட்கள் குறித்து முழு விவரங்களுடன் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார். இம்மாதம் ஆய்வுக் கூட்டம் கல்வி அதிகாரிகளை கலகலக்க செய்தது.