/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுத்தம் என்பது நமக்கு: கீழக்குயில்குடி சமணர் படுக்கை பாதையில் இல்லை: 20 ஆண்டுகளாக பராமரிப்பற்று இருப்பதால் பரிதாபம்
/
சுத்தம் என்பது நமக்கு: கீழக்குயில்குடி சமணர் படுக்கை பாதையில் இல்லை: 20 ஆண்டுகளாக பராமரிப்பற்று இருப்பதால் பரிதாபம்
சுத்தம் என்பது நமக்கு: கீழக்குயில்குடி சமணர் படுக்கை பாதையில் இல்லை: 20 ஆண்டுகளாக பராமரிப்பற்று இருப்பதால் பரிதாபம்
சுத்தம் என்பது நமக்கு: கீழக்குயில்குடி சமணர் படுக்கை பாதையில் இல்லை: 20 ஆண்டுகளாக பராமரிப்பற்று இருப்பதால் பரிதாபம்
ADDED : ஏப் 16, 2024 04:41 AM

மத்திய தொல்லியல் துறை சார்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கீழக்குயில்குடி சமணர் மலை படுக்கைக்கு முன்பாக உள்ள கோயிலும் கோயிலை ஒட்டி மலைக்கு செல்வதற்கான பாதுகாப்பு கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டுகளும் 'டிரக்கிங்' செல்பவர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக உள்ளது.
மெயின் ரோட்டில் இருந்து படுக்கைக்கு செல்ல 200 மீட்டர் துாரமே உள்ளது. கல்லும் கரடுமாக நடந்து செல்பவர்களின் பாதங்களை பதம் பார்க்கிறது ரோடு.
பாதையின் ஒருபுறம் மலைக்கரடுகளும் மறுபுறம் தனியார் நிலமுமாக காட்சியளிக்கிறது. ரோட்டை சீரமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு அப்படியே கிடக்கிறது.
சொற்ப படிக்கட்டுகளில் மேலே ஏறினால் பரந்து விரிந்த சமணர் படுக்கை பிரமாண்டமாக உள்ளது. அந்தரத்தில் தொங்கும் பாறையின் முகப்பில் தீர்த்தங்கரர் உருவமும் படுக்கையின் மேற்பகுதி பாறையில் அழகிய சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
2005 - 06 ல் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் செலவில் இணைப்புச்சாலை, கல்வெட்டு, தெருவிளக்கு, இணைப்பு படிக்கட்டு, கைப்பிடி, தகவல் பலகை, குடிநீர் அமைக்கப்பட்டது.
இயற்கையாகவும் அதேநேரம் மாநகராட்சி பகுதியை ஒட்டியதாகவும் உள்ள இந்த தொல்லியல் நினைவுச் சின்னம் 20 ஆண்டுகளாக பராமரிப்பற்று கிடக்கிறது.
ஆலமரக்கூட்டங்களின் கீழே வசதியாக அமர்வதற்காக இயற்கையாக படிந்து கிடக்கும் பாறைகளில் அமரும் குடிமகன்கள் குடித்து விட்டு மது பாட்டில்களையும் பிளாஸ்டிக் கப்களையும் அப்படியே விட்டுச் செல்வது இன்னமும் தொடர்கிறது.
சில மாதங்களுக்கு முன் தனியார் அமைப்புகள் கண்ணாடி பாட்டில் துண்டுகளை அகற்றி சுத்தம் செய்த நிலையில் மீண்டும் காட்சி மாறாமல் பாட்டில்களை வீசியும் உடைத்தும் செல்கின்றனர். ஆங்காங்கே நெருப்பு வைத்துச் செல்வதால் புற்களுடன் மரங்களும் கருகி காணப்படுகிறது.
பாதுகாப்பு தேவை
மெயின் ரோட்டில் இருந்து தார் ரோடாக அமைக்காமல் பட்டியல் கற்களால் படுக்கை முன்புறம் வரை பாதை அமைத்தால் பாரம்பரிய நினைவுச் சின்னத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும்.
பாதையின் இருபுறமும் பத்தடி உயரத்திற்கு கம்பி வேலி அமைத்து தெருவிளக்கு அமைத்தால் இரவிலும் வெட்ட வெளியில் பாறையின் அழகை பயமின்றி ரசிக்கலாம். குடிநீர், கழிப்பறை அமைப்பதற்கு போதிய இடம் உள்ளதால் அடிப்படை வசதிகளை செய்து பராமரிக்க வேண்டும்.

