/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி கில்லாடி பேர்வழி துபாயிலும் கைவரிசை
/
தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி கில்லாடி பேர்வழி துபாயிலும் கைவரிசை
தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி கில்லாடி பேர்வழி துபாயிலும் கைவரிசை
தொழிலதிபரிடம் ரூ.1.79 கோடி மோசடி கில்லாடி பேர்வழி துபாயிலும் கைவரிசை
ADDED : செப் 20, 2025 10:56 PM

மதுரை:பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என, மதுரை தொழிலதிபரிடம், 1.79 கோடி ரூபாய் மோசடி செய்த நபர், சிங்கப்பூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார். ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம் மதுரை சுந்தரராஜபுரம் பாலசுப்பிரமணியன், வில்லாபுரம் சரவணகுமார் அறிமுகமாகினர்.
ரூ.1.79 கோடி
இருவரும் பங்குதாரராக இருந்து 'காண்டி டிரைனர்ஸ்' என்ற பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தினர்.
ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாக, சிவக்குமாருக்கும், இவர்களுக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்தது. தங்களை முழுமையாக நம்பிய சிவக்குமாரிடம், 'பங்குச்சந்தை இப்போது ஏற்றத்தில் உள்ளது. முதலீடு செய்ய, 1 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
'இரு மடங்கு லாபம் கிடைக்கும். கொடுக்கும் பணத்திற்கு ஈடாக எங்கள் பினாமி சொத்து ஆவணங்களை தருகிறோம்' எனக்கூறி சில ஆவணங்களை கொடுத்து, 1.79 கோடி ரூபாய் பெற்றனர்.
இந்நிலையில், 'காண்டி கேப்பிடல்ஸ்' என்ற பெயரில் போலி இணையதளம் ஆரம்பித்து, அதில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தனர்.
'லுக்அவுட்' நோட்டீஸ்
இது தொடர்பாக, 1.22 கோடி ரூபாய் மோசடிக்கு ஆளான சதீஷ்குமார் புகாரில் சுப்பிரமணியபுரம் போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். சரவணகுமார் துபாய்க்கு தப்பினார்.
சிவக்குமாரை விசாரித்தபோது, அவரையும் இந்த இருவரும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் பாலசுப்பிரமணியன், சரவணகுமார் உட்பட 8 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'சதீஷ்குமார் புகாரில் ஏற்கனவே கைதாகி ஜாமினில் உள்ள பாலசுப்பிரமணியனை மீண்டும் கைது செய்து விசாரிக்க உள்ளோம்.
'துபாயில் தலைமறைவாக இருந்த சரவணகுமார், அங்குள்ள தமிழர்களிடமும் இதே போல பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் பதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே 'லுக்அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றனர்.