/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களை திசை திருப்பும் வேலையில் அ.தி.மு.க., ஈடுபட வேண்டாம்; செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்

ADDED : நவ 16, 2024 05:22 AM
மதுரை : மதுரையில் முல்லைநகர் பகுதி குடியிருப்புகள் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் அ.தி.மு.க., அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அமைச்சர் கூறியதாவது: மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகாரிகள், அலுவலர்கள் இரவிலும் பணியாற்றினர். முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி, செல்லுார் பகுதிகள் இனிமேல் மழையால் பாதிக்காத வகையில் கண்மாய் உபரி நீரை வைகை ஆற்றுக்குள் கொண்டு செல்ல ரூ.15 கோடியில் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் ஏன் செய்யவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மக்களை திசை திருப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.
முல்லைநகர் குடியிருப்புகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவையே மாவட்ட நிர்வாகம் பின்பற்றி வருகிறது. மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.
ஆனால் 'நீர்ப்பிடிப்பு பகுதியில் அரசு கட்டடங்கள் கட்டினால் ஏற்றுக்கொள்ளலாம். ஏழை மக்கள் வீடு கட்டினால் இடிக்கலாமா. அரசு கட்டடங்களை இடிங்க' போன்ற மக்களை திசை திருப்பும் வகையில் செல்லுார் ராஜூ பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. மக்கள் மீது அவருக்கு உண்மையில் அக்கறை இருந்தால் குடியிருப்பு சங்கங்களுடன் அவரும் ஒரு மனுதாரராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே.
முல்லைநகர் பிரச்னையில் மனிதாபிமான அடிப்படையில் நல்ல முடிவு கிடைக்கும். அதுவரை அ.தி.மு.க., 'அரசியல் அவியல்' செய்ய வேண்டாம். இவ்வாறு கூறினார்.