/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
3 சக்கர வாகனம் கேட்டு அலையும் மாற்றுத்திறனாளி
/
3 சக்கர வாகனம் கேட்டு அலையும் மாற்றுத்திறனாளி
ADDED : செப் 19, 2025 02:39 AM

வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தோடனேரியை சேர்ந்தவர் முதியவர் ராஜாராம் 76, இவருக்கு 2010ல் ஏற்பட்ட விபத்தில் வலது கால் இடுப்பு மூட்டு முறிந்து நடக்க முடியாமல் போனது. 2013ல் மாற்றுத்திறனாளிக்கான அட்டை பெற்றார். 2017 முதல் உதவித்தொகை பெறுகிறார். இவர் 12 ஆண்டுகளுக்கு முன் 3 சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்தும் இன்று வரை, ஊன்றுகோல் கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கும் மேலாக கலெக்டர், மாற்றுத்திறனாளி நல அலுவலகங்களில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 2023ல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 3 சக்கர வாகனத்திற்கு அட்டை வழங்கினர். அதனை பின்னர் ஊன்றுகோல் என மாற்றி விட்டனர். அதன்பின் நாள் முழுவதும் காக்க வைத்து எதுவும் வழங்காமல் கலைந்து சென்றனர்.
மனைவி, 50வயது மனநிலை பாதித்த மகனுடன் சிரமப்படுகிறேன். தேனி எம்.பி.,தங்கத் தமிழ்ச்செல்வன், தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசனிடம் கோரிக்கை வைப்பேன். அதிகாரிகள் 3 சக்கர வாகனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.